இந்நாட்டினுள் குற்றங்கள், போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலகக் குழுவினரை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களினது ஆதரவு பொலிஸாருக்கு தொடர்ந்தும் அவசியமானதும், பொலிஸார் குறித்து நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்வதன் மூலம் இலங்கை சமூகம் பாதுகாப்பாக இருக்குமென பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நேற்று (05) போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை அடையாளம் கண்டு சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை வழங்குவதற்கான “சுவசார கெதல்ல” மத்திய நிலையம் களனி பொலிஸ் பிரிவினில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வின்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த பொலிஸ்மா அதிபர், கடந்த நாட்களில் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதான தந்தை என அடையாளம் காணக்கூடிய நபர் ஒருவர் தனது குழந்தையை மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதலுக்குட்படுத்தி துன்புறுத்தும் காணொளியொன்று வெளியாகியிருந்தது. குறித்த நபரை கூடிய விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தி, குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென சமூகத்தின் அனைத்து தரப்பினரும் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
குறித்த குற்றவாளி யார் எனவும் இலங்கையில் எப்பாகத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றது என யாரும் தகவல் அறிந்திறாத சந்தர்ப்பத்தில், பொதுமக்களின் ஒத்துழைப்புடன், இலங்கைப் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் பூரண ஆதரவுடனும், குற்றவாளியை விரைவில் கைது செய்வதற்கும், குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் முடிந்தது என பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
இச்சம்பவத்தை நினைவூட்டிய அவர் மேலும், பொலிஸார் குறித்து பொதுமக்களுக்கு பல்வேறுப்பட்ட விமர்சனங்கள் இருக்கலாமென்றும், அவ்விமர்சனங்களையும் குறைபாடுளையும் நிவர்த்தி செய்துகொள்ள பொலிஸார் முன்வந்து தயாராக இருப்பதாகவும், பெரும்பாலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் தமது கடமைகளை மேற்கொள்கின்றபடியினால், பொலிஸ் சேவையின் கீர்த்திநாமத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் திடசங்கற்பத்தையும் குறுகிய மனப்பான்மையின் மூலமாக சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாமென இதன் போது பொலிஸ்மா அதிபர் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment