களுத்துறை, பேருவளை ஆசிரியர் வெற்றிடங்களை உடன் நிரப்பவும் : கல்வியமைச்சரிடம் கோருகிறார் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 6, 2024

களுத்துறை, பேருவளை ஆசிரியர் வெற்றிடங்களை உடன் நிரப்பவும் : கல்வியமைச்சரிடம் கோருகிறார் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

களுத்துறை, பேருவளை, கல்வி வலயங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வியமைச்சு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

மேற்படி கல்வி வலயங்களில் உயர் தர வகுப்புகளுக்கு நீண்ட காலமாக நிலவிவரும் ஆசிரிய வெற்றிடங்கள் இன்னும் நிரப்பப்படாதுள்ளன. இதனால் சிக்கல்கள் தொடர்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக ஆராய்ந்து அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எம் பி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நாட்டின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், களுத்துறை கல்வி வலயத்தில் நிலவும் பாரிய ஆசியர் பற்றாக்குறை தொடர்பாக பல தடவைகள் கல்வியமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். அதற்கு சிறந்த முறையில் பதில் வழங்கப்பட்டபோதும் அதற்கான செயற்பாடுகள் திருப்தியளிக்கும் வகையில் இடம் பெறவில்லை.

களுத்துறை கல்வி வலயத்தில் பேருவளை தொகுதியில் மாத்திரம் நூற்றுக்கு 36 வீத ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. நூறு பேர் செயற்பட வேண்டிய நிலையில் 36 பேருக்கான வெற்றிடம் நிலவுகிறது.

பேருவளை தொகுதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புகளுக்கு கணிதம் மற்றும் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. 10, 12 வருடங்களாக இந்த ஆசிரியர் பற்றாக்குறை தொடர்கிறது. 

அவ்வாறாயின் இந்த மாணவர்கள் எவ்வாறு பரீட்சைகளுக்கு முகம்கொடுக்க முடியும்? என நான் கேட்க விரும்புகின்றேன். அது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் கல்விமைச்சரைக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதேபோன்று பேருவளை கல்வித் தொகுதியில் 52 ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. அது களுத்துறை வலயத்தில் 92 ஆக இருந்து வருகிறது. 

கல்வியற் கல்லூரிகளில் இருந்து வெளிவரும் ஆசிரியர்களை இந்த பாடசாலைகளுக்கு நியமிப்பதாக அமைச்சர் தெரிவித்து வருகின்றபோதும் இந்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்களையும் வேறு பிரதேசங்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி அனுப்பும் நிலையே காணப்படுகிறது. 

இவ்வாறான தீர்மானங்களை யார் எடுக்கிறார்கள் என அறிய முடியவில்லை. அந்த ஆசிரியர்கள் பல மணி நேரம் பயணித்து அந்தந்த பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.

எனவே நீண்ட காலமாக இந்த பிரதேசத்திலிருந்து வரும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாகத் தேடிப்பார்த்து, இதற்குத் தீர்வுகாண அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment