கத்தோலிக்க சபைக்கு மாத்திரமல்ல நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையில்லை - டிலான் பெரேரா - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 30, 2024

கத்தோலிக்க சபைக்கு மாத்திரமல்ல நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையில்லை - டிலான் பெரேரா

(இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு அரசாங்கம் முறையாக பதிலளிக்கவில்லை. விசாரணைகள் தொடர்பில் கத்தோலிக்க சபைக்கு மட்டுமல்ல நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மூன்று நாள் சபை ஒத்திவைப்பு விவாதத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசாங்கம் முறையாக பதிலளிக்கவில்லை. குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்பில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது.

நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு விதமாகவும், பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பிறிதொரு எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பில் ஆளும் தரப்பினர் முறையற்ற கருத்துக்களை குறிப்பிடுகிறார்கள்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கோட்டபய ராஜபக்ஷ உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலின் உண்மையை பகிரங்கப்படுத்துவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுப்பதாகவும் கத்தோலிக்க சபைக்கு வாக்குறுதி வழங்கினார். அதேபோல் 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன இதே வாக்குறுதியை வழங்கியது.

குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை கோட்டபய ராஜபக்ஷவும், அவர் தலைமையிலான அரசாங்கமும் நிறைவேற்றவில்லை. இதன் பின்னரே கத்தோலிக்க சபை கேள்வி எழுப்பியது. 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் நீதியை பெற்றுக் கொடுப்பதாக குறிப்பிட்டவர்கள் இன்று பேராயர் அரசியல் செய்கிறார் என்று குறிப்பிடுகிறார்கள்.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு தேசிய தேர்தல்களில் குண்டுத் தாக்குதல்களை அரசியலுக்காக பயன்படுத்தியதை ஆளும் தரப்பினர் மறந்து விட்டார்கள்.

குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் கத்தோலிக்க சபைக்கு மாத்திரமல்ல ஒட்டு மொத்த மக்களுக்கும் நம்பிக்கையில்லை என்றார்.

No comments:

Post a Comment