பகிரங்க விவாதத்தை நடத்த முடியாதவர்கள் எவ்வாறு தீர்வினை காண்பார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் - அமைச்சர் நளின் பெர்ணான்டோ - News View

About Us

About Us

Breaking

Monday, April 22, 2024

பகிரங்க விவாதத்தை நடத்த முடியாதவர்கள் எவ்வாறு தீர்வினை காண்பார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் - அமைச்சர் நளின் பெர்ணான்டோ

(இராஜதுரை ஹஷான்)

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் பகிரங்க விவாதத்தை நடத்த முடியாதவர்கள் எவ்வாறு பொருளாதார பாதிப்புக்கு நிலையான தீர்வினை காண்பார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். தற்போதைய மறுசீரமைப்புக்களை அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் முன்கொண்டு செல்ல வேண்டும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது, பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுள்ளோம். பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பு என்பன பாரிய சவால்களை எதிர்க்கொண்டிருந்தபோதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைப் பொறுப்பேற்றார். நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டினார். அதனை தொடர்ந்து எரிபொருள், எரிவாயுவுக்கான வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

நாட்டின் நிதி நிலைமை ஸ்திரப்படுத்தப்பட்டதன் பின்னர் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும்.

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் வெற்றி பெற்றுள்ளன. எமது வெற்றி சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களில் வெளிப்பட்டன. நாட்டின் நிதி நிலைமை ஸ்திரமடைந்துள்ளமை எமது பிரதான வெற்றியாகும்.

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு ஐக்கிய மக்கள் சக்தியினர் மக்கள் விடுதலை முன்னணியினருக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் விவாதம் இன்றும் இழுபறி நிலையில்தான் உள்ளது. பொருளாதார நிலைமை தொடர்பில் ஒரு விவாதத்தை கூட நடத்த முடியாத இவ்விரு தரப்பினரும் எவ்வாறு பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண்பார்கள்.

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் செயற்பாடுகள் வெற்றி பெற்றுள்ளன. எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் வெளிநாட்டு அரசமுறை கடன்கள் மறுசீரமைக்கப்படும். தற்போதைய மறுசீரமைப்புக்களை அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment