கல்விக்கு முதலிடம், தமிழர் ஐக்கியத்துக்கு சிறப்பிடம், இரண்டிலும் கனடிய தமிழர், உலகத் தமிழருக்கு வழிகாட்டி - மனோ கணேசன் - News View

About Us

About Us

Breaking

Monday, March 4, 2024

கல்விக்கு முதலிடம், தமிழர் ஐக்கியத்துக்கு சிறப்பிடம், இரண்டிலும் கனடிய தமிழர், உலகத் தமிழருக்கு வழிகாட்டி - மனோ கணேசன்

இன்று, தமிழர்களாகிய எங்கள் ஒரே ஆயுதம், கல்வி. அதேபோல் எங்கள் ஒரே சிந்தனை தமிழ் ஒற்றுமை. இந்த இரண்டு கொள்கைகளையும் முன்னெடுத்து, கனடா தமிழர் பேரவை, அமெரிக்கா முதல் ஐரோப்பா, ஆசியா ஊடாக ஆஸ்திரேலியா வரை உலகம் முழுக்க பரவி, விரவி வாழ்கின்ற தமிழருக்கு, முன்மாதிரியாக நின்று வழி காட்டி உள்ளது. இந்த இரு கொள்கைகளின் அடையாளமாகவே, இங்கே இன்று இந்த மலையக தமிழரினுள் வரும் பெருந்தோட்ட பிள்ளைகள் பயிலும், தெஹியோவிற்ற தமிழ் மகாவித்தியாலய விஞ்ஞானகூடம் கட்டப்பட மற்றும் உபகரணங்கள் வழங்க, கனடா மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் மத்தியில் நிதி சேகரித்து, கனடா தமிழர் பேரவை சாதித்து காட்டியுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனின் கோரிக்கையின் பேரில், கனடா தமிழர் பேரவையின் நிதி பங்களிப்பால், நிர்மாணிக்கப்பட்ட தெஹியோவிற்ற தமிழ் மகாவித்தியாலய விஞ்ஞானகூட அங்குரார்ப்பண விழாவில், மனோ கணேசன் எம்பி, கனடா தூதுவர் எரிக் வொல்ஷ், கனடா தமிழர் பேரவை நிர்வாகிகள் டென்டன் துரைராஜா, துஷ்யந்தன், உமாசுதன் சுந்தரமூர்த்தி, அசோகன் தம்புசாமி, எம்பிகள் ராதாகிருஷ்ணன், சுஜித் பெரேரா, உதயகுமார், பாடசாலை அதிபர் திலகலோஜினி, கேகாலை மாவட்ட அமைப்பாளர் பரணிதரன் உள்ளிட்ட பெருந்தொகைகையானோர் கலந்துகொண்டனர். கல்விக்கு முதலிடம், தமிழர் ஒற்றுமை ஆகிய இருமுனை செயற்பாட்டில், கனடா தமிழர் பேரவை ஆற்றியுள்ள பணி தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியதாவது,

இலங்கை அரசாங்கத்திடம் நிதி இல்லை. அது பற்றி ஒப்பாரி வைப்பதில் பயனும் இல்லை. நாளை அரசு மாறினாலும் சடுதி மாற்றம் வர போவதும் இல்லை. நிலைமை இயல்பு வாழ்வுக்கு திரும்ப பல ஆண்டுகள் ஆகும். இந்நிலையில் ஏற்கனவே இந்நாட்டில் ஒடுக்க பட்டு, பாரபட்சமாக நடத்த படும் தமிழர்கள், மென்மேலும் துன்பத்தை எதிர் நோக்குகிறார்கள்.

முதலாவது கல்வி. இங்கேதான், உலகம் முழுக்க புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் அடைகிறது. எம்மில் பல தேவைப்பாடுகள் இருந்தாலும், பிரதான தேவைப்பாடு, கல்வி என சான்றோர் தீர்மானித்து விட்டார்கள். அதைதான் “கல்விக்கு முதலிடம்” என்கிறோம். கல்வி கிடைத்து விட்டால், ஏனைய எல்லா வளங்களும் வந்து சேர வேண்டிய இடத்தில் வந்து சேர்ந்து, பொருந்தி விடும். அதை கனடிய தமிழர் உணர்ந்து உள்ளார்கள். இலங்கை முழுக்க வாழும் தமிழ் மாணவர்களின் முன்பள்ளி கல்வி முதல், உயர்கல்வி வரை மிகப்பெரும் சவால்களை நமது இனம் எதிர்கொள்கிறது. அவற்றை நாம், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உடன் பிறப்புகளின் பங்களிப்புடன் வெற்றிகரமாக சந்திப்போம்.

இரண்டாவது, தமிழர் ஒற்றுமை. இந்நாட்டில் தனித்துவ அடையாளங்களை கொண்ட ஈழத்தமிழர், மலையகத்தமிழர் ஆகியோர் மத்தியில் ஏற்படக்கூடிய இயல்பான ஒன்றுசேர்வின் மூலமாகவே இலங்கை வாழ் தமிழர் ஒற்றுமை ஓங்க முடியும். எமக்கு வேறு வழி கிடையாது. அதையும் கனடிய தமிழர் உணர்ந்து உள்ளார்கள். அதன் காரணமாகவே, மலையக தமிழரின் இலங்கை குடிபுகு 200 ஆண்டு பூர்த்தியின் அடையாளமாக நிதி சேகரிப்பை நடாத்தி இந்த பெரும் பணியை ஆற்றி உள்ளார்கள். பல ஆயிர கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழும் எம் தமிழர் எம்மையும் அரவணைகிறார்கள் என்ற செய்தி இன்று இங்கே மலையக தமிழ், பெருந்தோட்ட மக்களை உணர்வுபூர்வமாக சென்று அடைகிறது. இதைவிட தமிழர் ஒற்றுமைக்கு சான்று என்ன வேண்டும்?

நாம் இப்போது “தமிழர் கல்வி மேம்பாட்டு கழகம்” அமைத்துள்ளோம். அதன் தலைவராக, தகைமையுள்ள நண்பர் அதிபர் பரமேஸ்வரனை நியமித்துள்ளோம். நாடாளுமன்ற சட்டப்படி கூட்டிணைக்கப்படும் இந்த கல்வி கழகத்தின், கல்விக்கு முதலிடம் என்ற கருப்பொருளில் இணைய தளம் வெகு விரைவில் அறிமுகமாகும். அதில், இலங்கை முழுக்க அனைத்து மாவட்ட தமிழர் கல்வி தேவைகள் தொடர்பில் நம்பக தன்மை கொண்ட தகவல் பதிவேற்றம் செய்யப்படும். ஆகவே உலக தமிழர் அவற்றை தெரிந்து அறிந்து நேரடியாக உதவிடலாம்.

No comments:

Post a Comment