தண்டனைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் மீளப் பெறப்பட்டது : பெரும்பாலானோர் நிறைவேற்றுவதை இடைநிறுத்துமாறு கோரிக்கை - நீதி அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 24, 2024

தண்டனைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் மீளப் பெறப்பட்டது : பெரும்பாலானோர் நிறைவேற்றுவதை இடைநிறுத்துமாறு கோரிக்கை - நீதி அமைச்சர்

(எம்.ஆர்.எம்.வசீம்)

உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தண்டனைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படமாட்டாது என உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளோம் பாராளுமன்றத்திலும் அதனை வாபஸ் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்போம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

14 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்பவர்கள் தொடர்பான புதிய சட்ட திருத்தம் தொடர்பில் குறிப்படுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தண்டனைச் சட்டக் கோவை ஏற்பாடுகளுக்கு அமைவாக 16 வயதுகுட்பட்ட சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்வது அல்லது உடல் ரீதியான தொடர்புகளை வைத்திருந்த ஒருவருக்கு பெற்றுக் கொடுக்கப்படும் குறைந்த கட்டாய தண்டனைகள் காணப்படுகின்றன.

சில சந்தர்ப்பங்களில் 14 வயதுக்கு மேற்பட்ட 16 வயதுக்கு குறைந்த சிறுமிகள் அவர்கள் தொடர்புகளை வைத்துக் கொண்டிருப்பவர்களுடன் இவ்வாறான நிலைமைக்கு முகம்கொடுத்து வருவதான அறிக்கைகள் காரணமாக கடந்த 3, 4 வருடங்களாக ஆராய்ந்து நீதி அமைச்சுக்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

தண்டனைச் சட்டக் கோவையில் தண்டனை வழங்கும் முறைமையில் ஏதோவொரு வகையில் திருத்தம் மேற்கொண்டு நிலைமையை கருத்திற்கொண்டு பொருத்தமான தண்டனை ஒன்றை வழங்கும் வகையில் நீதிபதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என தெரிவித்தோம்.

எனினும் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டதும் அதனை இரத்துச் செய்யுமாறு சிவில் அமைப்புகள், மகளிர் அமைப்புகள் என்னிடம் கேட்டுக்கொண்டன. அதன் பிரகாரம் இந்த சட்டமூலத்தை உயர் நீதிமன்றில் சவாலுக்குட்படுத்திய சந்தர்ப்பத்தில் இந்த சட்டமூலத்தை தொடர்ந்து கொண்டு செல்லப்போவதில்லையென நான் சட்டமா அதிபருக்கு ஆலாேசனை வழங்கினேன்.

அதேநேரம் இது தொடர்பாக அடுத்த வாரம் கலந்துரையாட வருமாறு குறித்த தரப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். கலந்துரையாடலுக்கு பின்னர், திருத்தம் அவசியமா? எவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும்.

எனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படமாட்டாது என உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளோம். பாராளுமன்றத்திலும் அதனை வாபஸ் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்போம்.

இந்த சட்டமூலம் என்னால் ஆராயப்பட்டதன் பிரகாரம் சமர்ப்பிக்கப்படவில்லை. நீதிபதிகள் உள்ளிட்ட விசேட நிபுணர்கள் குழுவொன்றினாலே சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த சட்டமூலம் தொடர்பாக மேலும் கலந்துரையாடுவோம்.

எதிர்காலத்தில் மேலும் 60 சட்டமூலங்களை கொண்டுவர இருக்கிறோம். அனைத்து சட்டமூலங்களும் சட்டமா அதிபருக்கு சமர்ப்பித்து, அது அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பதை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே கொண்டுவரப்படும் என்றார்.

No comments:

Post a Comment