யாழில் ஊடகவியலாளர் எனக்கூறி 43 இலட்சம் ரூபாய் மோசடி : கனடா செல்லும் ஆசையால் நேர்ந்த சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 25, 2024

யாழில் ஊடகவியலாளர் எனக்கூறி 43 இலட்சம் ரூபாய் மோசடி : கனடா செல்லும் ஆசையால் நேர்ந்த சம்பவம்

தன்னை ஊடகவியலாளராக அடையாளப்படுத்திக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் சந்தோஷ் நாராயணனின் மாபெரும் இசை நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாகவும், அதற்காக இலங்கையில் இருந்து சில ஊடகவியலாளர்களை அழைத்துச் செல்ல உள்ளதாகவும் கூறி, அவ்வாறு அழைத்துச் செல்லப்படவுள்ள ஊடகவியலாளர்களுடன் ஊடகவியலாளராக உங்களையும் அழைத்துச் சென்று கனடாவில் இறக்கி விடுவதாக யாழ்ப்பாண இளைஞன் ஒருவரிடம் கூறியுள்ளார்.

அதற்காக சிலருக்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும், ஊடக நிறுவனம் ஒன்றிடம் இருந்து ஊடகவியலாளர் என அடையாள அட்டையினை பெற்றுக் கொள்ள, அந்நிறுவனத்திற்கு ஒரு தொகை பணம் வழங்க வேண்டும் என இளைஞனிடம் இருந்து 43 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்று, இளைஞனுக்கு ஊடக நிறுவனம் ஒன்றின் அடையாள அட்டையையும் வழங்கியுள்ளார்.

பணத்தினை பெற்று நீண்ட காலமாகியும், கனடாவில் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வுக்கான ஏற்பாடுகள் எதுவும் நடைபெறுவதாக இளைஞன் அறியாத நிலையில், தனது பணத்தினை மீள தருமாறு கோரிய வேளை, இளைஞனின் தொடர்பை துண்டித்துள்ளார்.

அதனால் இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, சந்தேகநபர் வவுனியாவில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதேவேளை, இளைஞனுக்கு வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, அந்த ஊடக நிறுவனத்தினை, மோசடி செய்த நபரே நடாத்தி வந்தார் என தெரிய வந்துள்ளது.

பொலிஸாரின் தீவிர விசாரணைகளை அடுத்து, தலைமறைவாகி இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நபர் பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.விசேட நிருபர்

No comments:

Post a Comment