2022ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வருடாந்த வேலைத்திட்டம் என்பன கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.விக்ரமரத்னவினால் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவிடம் (31) கையளிக்கப்பட்டன. பாராளுமன்றத்தில் உள்ள பிரதி சபாநாயகர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
2022 ஆம் ஆண்டில் அமைச்சுகள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள், அதிகாரசபைகள், நியதிச்சட்ட நிதியங்கள், நியதிச்சட்டம் அற்ற நிதியங்கள், வெளிநாட்டு நிதியிலான திட்டங்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட 2200 ற்கும் அதிகமான நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டில் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றின் அறிக்கைகள் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு கணக்காய்வாளர் நாயகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் இந்த வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக விசேட கணக்காய்வு அறிக்கைகள் 2022ஆம் ஆண்டு கணக்காய்வாளர் நாயகத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன. இந்த நிறுவனங்களின் வினைத்திறன் மற்றும் செயல்திறனை அதிகரிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளும் இந்த அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளன.
அரசியலமைப்பின் 154(6) உப பிரிவின் படி கணக்காய்வாளர் நாயகம் இந்த வருடாந்த அறிக்கையை பிரதி சபாநாயகரிடம் சமர்ப்பித்தார். மேலும், 2024ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வருடாந்த வேலைத்திட்டமும் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன், 2024ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வருடாந்த வேலைத்திட்டம் பாராளுமன்ற நிதிகள் பற்றிய குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்றத்தில் உள்ள பல்வேறு குழுக்களுடன் கணக்காய்வாளர் நாயகம் மற்றும் தேசிய கணக்காய்வு அலுவலகம் இணைந்து செயற்படும் விடயம் குறித்தும் இங்கு நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.
பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் எச். ஈ. ஜனகாந்த சில்வா, கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ. பி. சி. விக்கிரமரத்ன, பிரதி கணக்காய்வாளர் நாயகம் நிமல் திலகரத்ன, கணக்காய்வு அத்தியட்சகர் என்.என்.கே. திவாகர ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment