தனக்கு எதுவும் தெரியாது என்கிறார் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Monday, November 6, 2023

தனக்கு எதுவும் தெரியாது என்கிறார் ஜனாதிபதி

இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்கால குழு நியமனம் தொடர்பில் அரசாங்கத்திற்கோ அல்லது தமக்கோ எதுவும் தெரியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (06) காலை தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இடைக்கால கிரிக்கெட் குழுவொன்றை நியமித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் அமைச்சரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இடைக்கால கிரிக்கெட் குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை கூட விளையாட்டுத்துறை அமைச்சர் அங்கீகரிக்கவில்லை என்பதும் இங்கு தெரியவந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் (SLC) இடைக்கால குழுவை நியமிப்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்படாத நிலையில், இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிரிக்கெட் போன்ற நிறுவனங்களுக்கு இடைக்கால குழுவை நியமிக்கும்போது வழமையாக ஜனாதிபதிக்கு அறிவிப்பதாகவும், ஆனால் இம்முறை விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த விடயத்தை ஜனாதிபதிக்கு தெரிவிக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை தொடர்புகொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல தடவைகள் முயற்சித்தும் இதுவரை அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் ஏழு பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் (SLC) இடைக்காலக் குழுவை விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்துள்ளார்.

இதன்படி, 1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் மூலம் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் விளையாட்டு அமைச்சர் இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்கால குழுவொன்றை அமைத்துள்ளதாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அர்ஜுன ரணதுங்கவை தலைவராகக் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணிக்கான இடைக்கால குழு இன்று (06) முதல் அமுலுக்கு வரும் அதேவேளை, முன்னைய குழு தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என விளையாட்டு அமைச்சு அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments:

Post a Comment