ஹப்புத்தளை, வெளிமடை பிரதான வீதியின் வல்காவலை பகுதியில் பாரிய மண்சரிவு இன்று (06) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக மறு அறிவித்தல் வரை இன்று மாலை 6.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை ஹப்புத்தளை - வெளிமடை பிரதான பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ், வீதி சீரமைக்கும் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு - பதுளை பிரதான வீதியின் பத்கொடை பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக தடைப்பட்டிருந்த வீதியின் பகுதி இன்று (06) காலை சீரமைக்கப்படவுள்ளது.
நேற்று (05) பிற்பகல் அப்பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக பத்கொடை பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
எவ்வாறாயினும், நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நேற்றிரவு வீதியின் சீரமைப்பு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதால், இன்று காலை இந்தப் பணியை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், பத்கொடையில் ஆபத்தான நிலையில் உள்ள 10 வீடுகளின் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
குறித்த மண் சரிவு காரணமாக அவ்வழியாக தொழிலுக்கு செல்வோர், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டிருந்தனர். பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பொது மக்கள் இணைந்து பாதையை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாகன சாரதிகளை மாற்றுப் பாதையைப் பயன்படுத்தி போக்குவரத்தை மேற்கொள்ளுமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment