வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் 'வரும் ஆனால் வராது' என்ற நகைச்சுவைக்கு இணையானது - எஸ். ஸ்ரீதரன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 15, 2023

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் 'வரும் ஆனால் வராது' என்ற நகைச்சுவைக்கு இணையானது - எஸ். ஸ்ரீதரன்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் நகைச்சுவை நடிகர் வடிவேலின் 'வரும் ஆனால் வராது' என்ற நகைச்சுவைக்கு இணையானதாக உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதல் நாள் குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட 2024 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் ''வரும் ஆனால் வராது'' என்ற நகைச்சுவை வசனம் போலவே உள்ளது.

அதாவது அரச ஊழியர்களுக்கு 10000 ரூபா ஜனவரி மாதம் வரும் ஆனால் வராது. அடுத்த ஏப்ரல் மாதத்துக்கு பின்னர்தான் அதனைப் பற்றி யோசிக்கலாம் என்று ஜனாதிபதி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும்போது நம்பிக்கை என்பது சரியாக சொல்லப்பட வேண்டும். இன்றைய பத்திரிக்கைகளில் பார்த்தால் அரச ஊழியர்களுக்கு 10000 ரூபா கொடுப்பனவு என்றுதான் உள்ளது.

ஆனால் அது ஜனவரி முதல் என்று சொல்லப்பட்டாலும் 2024 ஏப்ரல் மாதத்துக்கு பிறகுதான் பெற முடியும். இந்த இடைப்பட்ட காலத்துக்குள் எதுவும் நடக்கலாம். பாராளுமன்ற அல்லது ஜனாதிபதி தேர்தல்கள் கூட நடக்கலாம்.

எனவே இவ்வாறான ஏமாற்று நடவடிக்கைகள் அரசிடம் இருக்கும் வரைக்கும் அரசினால் சரியானதொரு பாதையை தெரிவு செய்ய முடியாது. அரச ஊழியர்களையும் சரியான பாதைக்கு கொண்டு செல்ல முடியாது.

கடந்த காலங்களிலும் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் எந்த முன்மொழிவுகளும் செயற்படுத்தப்படவில்லை. வருடாந்தம் வரவு செலவுத் திட்டம் என்பதொன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment