(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாட்டில் உள்ள 17 அரச பல்கலைக்கழகங்களின் பிரச்சினைகள் நாளுக்குநாள் தீவிரமடைந்துள்ளன. விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். கல்வி கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு ஏதும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை. மாறாக புதிதாக 4 பல்கலைக்கழகங்களை ஸ்தாபிப்பதாக குறிப்பிடப்படுகிறது. ஊருக்கு ஊர் பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதால் கல்வி கட்டமைப்பு மேம்படாது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் புரட்சிகரமானது என்று நிதி இராஜாங்க அமைச்சர் உட்பட ஆளும் தரப்பினர் புகழ்பாடுகிறார்கள். புரட்சிகரமானது என்றால் என்னவென்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் புரட்சிகரமானதல்ல, அது கனவு உலகத்தை அடிப்படையாகக் கொண்டது. புரட்சிகரமானது என்றால் சமூக கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். கனவு உலகு முன்மொழிவுகள் ஒருபோதும் மாற்றத்தை ஏற்படுத்தாது.
வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கும் கலாச்சாரம் தற்போது கடைப்பிடிக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த கால தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்றார். 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்ற குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
கடந்த கால தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடும் ஜனாதிபதி முதலில் உண்மைத் தன்மையுடன் செயற்பட வேண்டும். தேசிய வளங்களை விற்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்ப்பது பாரிய குற்றம் என்று ஜனாதிபதி குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
பழமை வாய்ந்த நுவரெலியா தபாலக கட்டிடத்தை பராமரிக்க முடியாத காரணத்தால் அதனை தனியார் மயப்படுத்தப் போவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். அந்த தபாலகத்தை முறையாக நிர்வாகம் செய்யாதவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மாறாக தபாலகத்தை தனியார் மயப்படுத்துவது சிறந்த திட்டமாக அமையாது.
கல்வித்துறை தொடர்பில் கனவுலகில் இருந்து முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பாடசாலைக் கல்வி கட்டமைப்பு வீழ்ச்சியடைந்துள்ளால் உயர் கல்வி முறைமை பலவீனமடைந்துள்ளது. நாட்டில் உள்ள 17 அரச பல்கலைக்கழகங்களின் பிரச்சினைகள் நாளுக்குநாள் தீவிரமடைந்துள்ளன. விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.
கல்வி கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு ஏதும் முன்வைக்கப்படவில்லை. மாறாக புதிதாக 4 பல்கலைக்கழகங்களை ஸ்தாபிப்பதாக குறிப்பிடப்படுகிறது. ஊருக்கு ஊர் பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதால் கல்வி கட்டமைப்பு மேம்படாது என்றார்.
No comments:
Post a Comment