சீனிக்கான இறக்குமதி வரியில் மாற்றம் செய்யும் தீர்மானம் அமைச்சரவையில் முன்வைக்கப்படுவதற்கு முன்னரே வர்த்தகர்களை சென்றடைந்தது எப்படி என்பது தொடர்பில், கேள்வி எழுப்புவதாகவும், வரி மறுசீரமைப்பு தொடர்பில் சுங்க அதிகாரிகள் அறிந்திருந்ததாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
சீனி இறக்குமதிக்கான வரி அதிகரிப்பை யார் அறிந்திருந்தார்கள். இது தொடர்பாக எவராவது தகவல் கொடுத்தார்களா? என்பது பற்றி அவசியம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
ஊடகவியலாளர்கள் சிலர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கையிலேயே, அமைச்சர் இந்த விடயங்களை குறிட்டார்.
சீனி இறக்குமதிக்கான வரி அதிகரிப்பு விடயம் அமைச்சரவைக்குக்கூட தெரியாது. சுங்கப்பகுதியினருக்கே இது தெரியும். இந்த வரி அறிவிப்பு விடயம் மோசடிக்கார்களுக்கு எவ்வாறு சென்றது என்பது கண்டறியப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
சீனி இறக்குமதி செய்யப்படவிருந்த வேளையில் சீனிக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படப்போகின்றது என்ற தகவல் வர்த்தகர்களை சென்றவடைவது எவ்வாறு? புகையிலை விலை குறைக்கப்படுவதான தகவலை வர்த்தகர்கள் எவ்வாறு அறிந்து கொள்கின்றனர்? இந்த விலை மாற்றம் அமைச்சரவைக்கு தெரியாது. இதனை சுங்கப்பகுதியினரே அறிவார்கள். அப்படியாயின் இந்த தகவல் எங்கிருந்து வெளியே சென்றது?
வரவு செலவுத்திட்டத்தில் சம்பளத்தை அதிகரிக்க ஏற்பாடு மேற்கொள்கையில், இதனை அறிந்துகொண்டு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இதேபோன்றுதான், ஏதாவது பொருட்களின் இறக்குமதி வரி அதிகரிக்கப்படுமாயின் அதனை அறிந்துகொண்டு அதன் மூலம் இலாபத்தை பெற சிலர் செயல்படுகின்றனர்.
அரசாங்கத்தின் வரி அதிகரிப்பை பயன்படுத்தி இலாபம் திரட்டி மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் பாரிய மோசடி கும்பல் செயல்படுகின்றது. வரி அதிகரிப்பின் மூலம் இலாபமடைவோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டி நடவடிக்கைகளை, நாம் மேற்கொள்வோம். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு மேலும் இடமளிக்க நாம் தயாராக இல்லை என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
“சமையில் எரிவாயு, எரிபொருள் ஆகியவற்றின் விலையை அரசாங்கம் அதிகரித்திருப்பதாக, பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்? அப்படியாயின் இந்த அரசாங்கம் யாருடையது” என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்கையில்,
“சமகால அரசாங்கம் சர்வ கட்சி அரசாங்கம். இந்த அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு உரித்தானது அல்ல. நாட்டு மக்கள் நெருக்கடி நிலைக்கு உள்ளான போதுதான், இந்த அரசாங்கத்தை அனைவரும் ஒன்றிணைந்து அமைத்தனர். இருப்பினும் இன்று சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது. மின் கட்டணம் போன்றவையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் சரி செய்வதற்கு கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். நாடு வங்குரோத்து நிலையில் உண்டு. இந்த மறுசீரமைப்பை மேற்கொள்ளாவிட்டால் வங்குரோத்து நிலையே தொடரும்.
No comments:
Post a Comment