ஏ.எச்.ஏ. ஹுஸைன்
பொலொன்னறுவை - வெலிக்கந்தை பொலிஸ் நிலையத்தின் பொலிஸார் தங்கும் விடுதியில் இருந்து இரத்த வெள்ளத்தில் பொலிஸ் அதிகாரியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
அந்தப் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜன்ற் ஆக கடமையாற்றி வந்த ஏறாவூரைச் சேர்ந்த மக்பூல் முஹம்மது ஹனீபா (வயது 52) என்பவரின் சடலமே இரத்த வெள்ளத்தில் தோய்ந்தவாறு பொலிஸ் விடுதியிலிருந்து சனிக்கிழமை 30.09.2023 சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
சடலம் இரத்த வெள்ளத்தில தோய்ந்திருப்பதை வைத்தும் சடலத்தில் காயம் இருப்பதனாலும் இது கொலையாக இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சடலம் தற்போது உடற் கூராய்வுப் பரிசோதனைக்காக பொலொன்னறுவை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை 03.10.2023 அன்றைய தினமே சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூராய்வுப் பரிசோதனை இடம்பெற சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக வெலிக்கந்தைப் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களினதும் சட்ட வைத்திய அதிகாரியினதும் நீதிபதியினதும் விசாரணைகளில் மேற்படி பொலிஸ் அதிகாரியின் இறப்புக்கான காரணம் தெரியவரலாம் என்று கூறப்படுகிறது.
இந்தப் பொலிஸ் சார்ஜன்ற் கடைசியாக அவசர தொலைபேசி இலக்கமான 119 இற்கு மயில்கள் மான்கள் வேட்டையாடப்படுவதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய பணிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸ் குழுவினருடன் சென்று கடமையில் ஈடுபட்டுத் திரும்பியிருந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment