(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதியை இன்றோ அல்லது நாளையோ பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக வெளியிடும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர் உதயண கிரிந்திகொட எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தனது கேள்வியின்போது, கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதி தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமான தீர்மானம் எதுவும் அறிவிக்கப்படாமல் உள்ளது. அதனால் மாணவர்கள் மன அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர். அதனால் பரீட்சை நடத்தப்படும் திகதியை விரைவில் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் மேலும் தெரிவிக்கையில், மாணவர்கள் பாதிக்கும் வகையில் இதுவரை எதுவும் நடந்து விடவில்லை. மேற்படி பரீட்சையை நடத்தும் திகதியாக ஏற்கனவே நாம் நவம்பர் 27ஆம் திகதியை குறிப்பிட்டிருந்தோம். எவ்வாறாயினும் அந்த திகதி முன் தள்ளப்படாமல் பிற்போட வேண்டிய நிலையே வரும். அந்த வகையில் இன்றோ அல்லது நாளையோ அது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படும்.
நான் கல்வி அமைச்சர் என்ற வகையில் முன்னெடுக்க வேண்டிய அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளேன். பரீட்சை தொடர்பான திகதி அறிவிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. அதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகமே அறிவிப்பார் என்றார்.
No comments:
Post a Comment