எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அனைத்து அரசாங்க ஊழியர்களினதும் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் சமகாலத்தில் தனியார் துறையின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கப் போவதை தெரிந்து கொண்டே மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட சில குழுக்கள் அது அவர்களின் அழுத்தத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என குறிப்பிட முயற்சித்துள்ளார்கள். அவ்வாறு தெரிவிப்பது எந்த அடிப்படையுமற்ற கூற்று என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தினந்தோறும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றதே தவிர குறைவடையும் நிலை காணப்படவில்லை. இந்த நிலையில் மக்களின் சம்பளத்தை அதிகரிப்பது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மூன்றாவது வரவு செலவுத் திட்டம் நவம்பர் 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்போவதாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான அறிவிப்பாக அமைந்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment