ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிளைகள் புணரமைக்கும் செயற்பாடுகளில் இளைய தலைமுறையினர்களுக்கு முன்னுரிமை வழங்கி கட்சி செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாகி உள்ளது. எனவே, இளைஞர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்த முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒலுவில் மத்திய குழுவின் தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற ஒலுவில் பிரதேசத்தில் கட்சிக் கிளைகள் புனரமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளர் உதுமாலெப்பை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நமது கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் (பா.உ) கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த பல சந்தர்ப்பங்களில் கட்சியின் செயற்பாடுகளில் இளைஞர்களையும் இணைத்துக் கொள்ளுமாறு நீண்ட காலமாக கிழக்கு மாகாண இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கட்சி விசுவாசம் வைத்து கிராம சேவகர் பிரிவுகளுக்கான அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்ட இளைஞர் அமைப்பாளர்கள் உங்கள் கிராம சேவகர் பிரிவுகளில் எல்லா இளைஞர்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இணைந்து செயல்படுவதற்கான அழைப்புக்களை விடுத்து அவர்களை ஒன்றிணைப்பதற்கான செயல்பாடுகளில் அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும்.
கட்சி செயற்பாடுகளில் விசுவாசமாக செயற்பட்டு வருகின்ற மூத்த அங்கத்தவர்களின் அனுபவங்களை பெற்று இளைஞர்கள் கட்சி செயற்பாடுகளில் ஈடுபட்டு கிராம மட்டத்திலிருந்து கட்சியினை பலப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் 31 கிராம சேவகர் பிரிவுகளில் கட்சியின் கிளைகள், இளைஞர்கள், மகளிர் கிளைகள் புனரமைக்கப்பட்டு செயற்பாடுகள் நிறைவு பெற்றது. பின் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இளைஞர்களுக்கான தலமைத்துவ பயிற்சி தொடர்பான விசேட அமர்வு ஒன்றை நடத்துவதாக எண்ணி உள்ளோம்.
இந்நிகழ்வில் கட்சியின் தலைவர், மக்கள் பிரதி நிதிகள், அரசியல் அதி உயர்பீட உறுப்பினர்களையும் அழைத்து இந்நிகழ்வினை சிறப்பாக நடாத்துவதற்கும் எண்ணியுள்ளோம்.
எனவே, கிராம சேவகர் பிரிவுகளுக்கு இளைஞர் அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் அர்ப்பணிப்போடு செயல்பட்டு தங்களின் கிராமத்தில் இளைஞர்களை ஒன்று திரட்டும் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் எனவும் உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளர் ஏ.சி. சமால்தீன், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா, ஒலுவில் அமைப்பாளர் ஏ.எல். சுபையிர் (ஆசிரியர்) மற்றும் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
(சலீம் றமீஸ்)
No comments:
Post a Comment