காஸாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை ஆதரவளித்தமைக்கு சவூதி அரேபியா நன்றி தெரிவித்து பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சரான இளவரசர் பைசல் பின் பர்ஹான் பின் அப்துல்லாஹ், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் நேற்றுமுனதினம் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு இலங்கைக்கான நன்றிகளைத் தெரிவித்து பாராட்டுக்களை குறிப்பிட்டுள்ளார்.
காஸாவில் உடனடி மனிதாபிமான யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி ஐ.நா. பொதுச் சபையில் கடந்த 27 ஆம் திகதி கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை, சவூதி அரேபியா உட்பட 120 நாடுகள் ஆதரவாக வாக்களித்து நிறைவேற்றியுள்ளன.
அதனை அடிப்படையாகக் கொண்டு சவூதி வெளிவிவகார அமைச்சர், இலங்கை வெளிவிவகார அமைச்சரைத் தொடர்பு கொண்டு நன்றிகளைத் தெரிவித்து கொண்டுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருப்பதாவது, சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் பைசல் பின் பர்ஹானுடன் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாகவும் குறித்த உரையாடலின்போது, மத்திய கிழக்கு நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சிகள் பற்றிய விரிவான தகவல்களை அவர் எனக்கு வழங்கினார்.
இரு நாடுகளின் தீர்வு என்ற கோட்பாட்டில், நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு அமைதியான தீர்வை எட்டுவதற்கான இலங்கையின் உறுதியான நிலைப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளேன். இந்த உரையாடலின் மூலம் இரு நாடுகளினதும் ஸ்திரனத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதிலுள்ள அர்ப்பணிப்பு பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது என்றுள்ளார்.
மர்லின் மரிக்கார்
No comments:
Post a Comment