ஜனாதிபதி சர்வதேச ரீதியில் நாட்டுக்கு அபகீர்த்தியையே ஏற்படுத்தியுள்ளார் - சாணக்கியன் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 5, 2023

ஜனாதிபதி சர்வதேச ரீதியில் நாட்டுக்கு அபகீர்த்தியையே ஏற்படுத்தியுள்ளார் - சாணக்கியன்

(எம்.ஆர்.எம்.வசீம்)

சனல் 4 வெளிப்படுத்தியுள்ள விடயங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை நிராகரிப்பதாக கூறி ஜனாதிபதி நாட்டுக்கு பெருமை சேர்க்கவில்லை. மாறாக சர்வதேச ரீதியில் நாட்டுக்கு அபகீர்த்தியையே ஏற்படுத்தியுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற துறைமுக அதிகார சபை மற்றும் சிவில் விமான சேவைகள் தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், அண்மையில் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கிய ஜனாதிபதி, எங்களை இரண்டாம் தர பிரஜைகளாக நினைக்கின்றீர்களா என்று கேட்டுள்ளார். அவர்கள் அப்படி நினைப்பதில் தவறில்லை. இங்கே இவ்வாறு நடந்தால் அப்படி நினைப்பார்கள்.

நீதிவான் நாட்டை விட்டு வெளியேறி செல்லும்போது அப்படி கேட்கலாம்தானே. நீங்கள் இவ்வாறு செய்வதால் நடக்கும் வேலையே இது.

பிரகீத் எக்னலிகொடவுக்கு எனன நடந்தது என்று அசாத் மௌலான கூறுவதாக தெரிவிக்கின்றார். ஆனால் நீங்கள் சர்வதேச விசாரணையை நிராகரிக்கின்றீர்கள். நீங்கள் அவ்வாறு கூறி நாட்டுக்கு பெருமையை கொண்டு வரவரவில்லை. அபகீர்த்தியையே கொண்டு வந்துள்ளீர்கள்.

வெளிவிவகார அமைச்சின் மகன்தானே அமைச்சருக்கு ஆலோசனை வழங்குகின்றார். அவர்தான் ஜனாதிபதிக்கு இந்த நேர்காணலுக்கு ஆலோசனை வழங்கினாரோ தெரியவில்லை. சிறுபிள்ளைத்தனமான பதிலையே அவர் வழங்கியுள்ளார்.

இதேவேளை, யாழ் - தமிழ்நாடு படகு சேவையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அடிக்கடி கதைக்கப்படுகின்றது. ஆனால் அதற்கான தடைகள் எங்கே இருக்கின்றது என்பது தொடர்பில் தெரியவில்லை.

இலங்கையில் வாழ முடியாமையினால் இந்தியாவுக்கு சென்ற இரண்டு இலட்சம் பேர் வரையிலானோர் அகதிகளாக இருக்கின்றனர். இவர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு இங்கு வருவதற்கு உரிமை உள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் விமான நிலையம் உள்ளது. யாரேனும் அமைச்சர் வரும்போது மட்டும் சுற்றுப்பயண விமானங்கள் நடக்கும். மாலைதீவு போன்று உள்ளக விமான சேவைகளுக்கு அதனை பயன்படுத்த முடியும் என்றார்.

No comments:

Post a Comment