இந்தியாவில் இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் ஆந்திராவில் தரித்து நின்றிருந்த ரயில் மீது, பலாசா எக்ஸ்பிரஸ் எனும் மற்றுமொரு ரயில் மோதியதில் 14 பயணிகள் உயிரிழந்துள்ளதோடு, 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் நேற்று (29) விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கிச் சென்ற பாசஞ்சர் ரயில் பாதையின் மேல் உள்ள கேபிள் பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டு இருந்தது. ரயில்வே ஊழியர்கள் அந்தப் பிரச்சனையை சரி செய்யும் பணியில் அப்போது ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் மீது பயங்கரமாக மோதியது.
இந்த ரயில் விபத்தில் 3 ரயில் பெட்டிகள் தடம்புரண்டதோடு, ஏராளமான பயணிகள் சிக்கிக் கொண்டு காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள், பொலிஸார் மற்றும் மீட்புப் படையினர் அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 14 பயணிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மேலும் 30 இற்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்த நிலையில் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளை அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபடுமாறு, காயமடைந்த பயணிகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும், நிவாரண உதவிகளையும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விசாகப்பட்டினம், அனக்காபள்ளி பகுதியில் உள்ள அனைத்து அம்பியூலன்ஸ் வண்டிகளையும் சம்பவ இடத்துக்கு அனுப்பவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று இரவு இந்த விபத்து நடந்ததைத் தொடர்ந்து அங்கு ரயில்வே பொலிஸார் குவிந்துள்ளதோடு, மீட்புப் பணிகளில் கிராம மக்களும் உதவி செய்தனர். இரவு நேரமானாலும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்றன.
ரயில்கள் மோதி 3 பெட்டிகள் தடம்புரண்டுள்ளதால் அந்த ரயில் பாதை வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புகள் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விபத்து காரணமாக 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, 22 ரயில்கள் வேறு மார்க்கமாக திருப்பிவிடப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தவும் உடனடியாக ரயில் பாதையை சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment