ராஜபக்ஷக்களின் பேச்சுக்களை கேட்டுக் கொண்டு அதன்படி நடக்கும் ரணிலே இன்று ஜனாதிபதி பதவியில் இருக்கிறார் - முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 28, 2023

ராஜபக்ஷக்களின் பேச்சுக்களை கேட்டுக் கொண்டு அதன்படி நடக்கும் ரணிலே இன்று ஜனாதிபதி பதவியில் இருக்கிறார் - முஜிபுர் ரஹ்மான்

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டை வங்குரோத்து அடைய செய்தவர்கள் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. எனினும் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் மக்கள் பேசுவதை தடுப்பதற்காக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துகின்றனர். ராஜபக்ஷக்களின் பேச்சுக்களை கேட்டுக் கொண்டு அதன்படி நடக்கும் ரணிலே இன்று ஜனாதிபதி பதவியில் இருக்கிறார். அன்று இருந்த ரணில் இன்றில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலக நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும். அதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் என கூறுகிறார்.

பொருளாதார உறுதியை ஏற்படுத்துவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இருப்பினும் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் ஜனநாயகத்துக்கு முரணாக, நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் முன்னெடுக்கப்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

குறிப்பாக மக்களின் குரலை ஒடுக்குவதற்கு நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் முகமாக புதிய சட்டமூலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய பயங்கரவாத சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் பிற்போடப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றங்களின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களின் கருத்து சுதந்திரம், அடிப்படை உரிமைகள் மற்றும் தகவல் அறிந்து கொள்ளும் உரிமை உட்பட அனைத்தும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவையனைத்தும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் என கூறுகிறார். இவற்றை பார்க்கும்போது வேடிக்கையாக உள்ளது.

பொருளாதாரத்தை சீரழித்து, நாட்டின் வளங்களை கொள்ளையடித்து, நாட்டு மக்களின் வரிப் பணத்தை திருடியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி முன்வரவில்லை. ஆனால் இது தொடர்பில் பேசுபவர்களுக்கு எதிரான அடக்குமுறை சட்டமூலகங்களை கொண்டு வந்து ஒடுக்குவதற்கு முயற்கிறார்.

இன்று அரசாங்கம் வேறு ஒரு பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ராஜபக்ஷக்களின் பேச்சுக்களை கேட்டுக் கொண்டு அதன்படி நடக்கும் ரணிலே இன்று ஜனாதிபதி பதவியில் இருக்கிறார். அன்று இருந்த ரணில் இன்றில்லை.

கூட்டங்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்லும்போது அரசாங்க தரப்பிலிருந்து பலர் செல்கிறார்கள். இந்த தரப்பினரை ஜனாதிபதி சுற்றுலா பயணத்துக்கு அழைத்துச் செல்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. இந்த கூட்டங்களுக்கு ஒருவரை அழைத்து செல்லலாம் அல்லவா? அதன் ஊடாக டொலரை சேமிக்கலாம். ஏன் ஜனாதிபதியால் முடியாது. ஜனாதிபதியின் அரப்பணிப்பு இதுதானா?

சீனி மோசடியின் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்பட்டார்களா? ஊழல் மோசடி மூலம் நாட்டு மக்களின் பணத்தை கொள்ளை அடித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதா அதுவும் இல்லை. இதன் பிறகும் நடக்காது. இருப்பினும் அப்பாவி மக்கள் வியர்வை சிந்தி உழைக்கும் பணத்தை அரசாங்கம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கிறது என்றார்.

No comments:

Post a Comment