தனியார் துறையினர் உலக சந்தையில் போட்டிபோடக் கூடியவர்களாக வேண்டும் - இலங்கை மத்திய வங்கி ஆளுநர் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 24, 2023

தனியார் துறையினர் உலக சந்தையில் போட்டிபோடக் கூடியவர்களாக வேண்டும் - இலங்கை மத்திய வங்கி ஆளுநர்

உலக சந்தையில் போட்டிபோடக் கூடியவாறு உள்ளூர் தனியார் துறையினர் தங்களை மாற்றிக் கொள்ளாது விட்டால் சவால்களுக்கு மத்தியில் நீடித்திருக்க முடியாதென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

உலகளாவிய பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மாநாடு அண்மையில் ‘கொந்தளிப்பான தருணத்தில் தலைமைத்துவம்’ எனும் தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உள்நாட்டில் உள்ள தனியார் துறையினருக்கு நீண்ட வரலாறுகள் காணப்படுகின்றன. அவர்கள் அரசாங்கத்திடத்தில் தமது வணிகத்துறை நிலைத்திருப்பதற்கான கோரிக்கையை முன்வைக்கின்றார்கள்.

குறிப்பாக, தமது துறையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றார்கள். இறக்குமதி வரிச் சலுகைகளை வழங்குமாறு கோருகின்றார்கள்.

உண்மையில் உள்நாட்டின் தனியார் துறையினர் நிலைத்திருப்பதாக இருந்தால் அவர்களுக்கான சந்தை வாய்ப்பு விரிவுபடுத்தப்பட்டதாக அமைய வேண்டும்.

குறிப்பாக, உலகளாவிய ரீதியில் உள்ள சந்தை வாய்ப்புக்களை நன்கு பயன்படுத்துவதற்கான ஏதுவான நிலைமைகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுப்பதையே நோக்காக கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் உலக சந்தையை அணுகும்போது அதில் காணப்படுகின்ற சவால்களுக்கு முகம்கொடுத்து போட்டித்தன்மையான களத்தின் ஊடாக முன்னேறுவதன் ஊடாகவே தனியார் துறையினர் தொடர்ச்சியாக நீடித்து நிலைத்திருக்க முடியும்.

குறிப்பாக, இந்தியா, தென் கொரியா, சீனா போன்ற நாடுகள் அவ்விதமான முறைமைகளையே பின்பற்றுகின்றன. ஆகவே, இலங்கையின் தனியார் துறையினரும், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சந்தை வாய்ப்புக்களை திட்டமிடல்களுடன் பயன்படுத்துவதன் ஊடாக எதிர்காலத்தில் வெற்றிகளை அடையலாம் என்றார்.

No comments:

Post a Comment