மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, September 29, 2023

மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை

(இராஜதுரை ஹஷான்)

நீர் மின்னுற்பத்தியில் காணப்படும் 750 மெகாவாட் மின்னுற்பத்தி பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்வதற்காக மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள வருடாந்த மின் கட்டண திருத்தத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முன்னெடுக்குமாறு மின்சார சபை முன்வைத்துள்ள யோசனையை பரிசீலனை செய்வதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் நரேந்திர டி சில்வா குறிப்பிடுகையில், நாட்டில் கடந்த நான்கு மாத காலமாக நிலவிய கடும் வறட்சியான காலநிலையால் நீர் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 4500 மெகாவாட் நீர் மின்னுற்பத்தி எதிர்பார்க்கப்பட்டபோதும் இதுவரையான காலப்பகுதியில் 3750 மெகாவாட் நீர் மின்னுற்பத்தி செய்யப்பட்டது.

நீர் மின்னுற்பத்தியில் 750 மெகாவாட் உற்பத்திக்கு கேள்வி காணப்படுவதால் அவற்றை மின்னிலையங்களில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதால் மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிக்குமாறு வலியுறுத்தியுள்ளோம்.

வருடாந்த மின் கட்டண திருத்தம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம் பெறவுள்ளது. இந்த திருத்தத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முன்னெடுக்குமாறு பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

இந்நிலையில் மின்சார சபை முன்வைத்துள்ள யோசனையை பரிசீலனை செய்வதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு 02 ஆம் மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் மின் கட்டணம் 66 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டது. அதற்கு முன்னர் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் மின்சார கட்டணம் 75 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை உத்தேசித்துள்ளது.

No comments:

Post a Comment