மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனையை தடுக்கும் பொறுப்பு பாராளுமன்றத்துக்குள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 9, 2023

மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனையை தடுக்கும் பொறுப்பு பாராளுமன்றத்துக்குள்ளது - எதிர்க்கட்சித் தலைவர்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை மற்றும் மதுபான பாவனை தொடர்பில் பிரச்சினை காணப்படுகிறது. இதனைத் தீர்க்கும் பாரிய பொறுப்பு பாராளுமன்றத்துக்கு உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கான பாராளுமன்ற சங்கம் கூடியபோது இதனைத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை மற்றும் மதுபான பாவனை தொடர்பில் பிரச்சினை காணப்படுகிறது. இதனைத் தீர்க்கும் பாரிய பொறுப்பு பாராளுமன்றத்துக்கு உள்ளது.

போதைப் பொருள் எதிர்ப்பு அமைப்புக்கள் இது தொடர்பில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெளிவுபடுத்தும் செயலமர்வொன்றை நடத்த வேண்டும். நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் சிறுவர் மற்றும் பெண்களின் உரிமைகள் உள்ளடக்கப்பட வேண்டும்.

இது ஒரு சிக்கலான மற்றும் முக்கியமான தலைப்பு என்பதால், பாராளுமன்றத்தில் இது தொடர்பாக வலுவான குரல் தேவை. சட்டவாக்கத்தில் இது முக்கியமானது என்பதால் இதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களுடன் இணைந்து தெளிவான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மதஸ்தலங்கள், பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளுக்கு அருகில் மதுபான கடைகளை நடத்த குறிப்பிட்ட தூர எல்லை இருந்தாலும் அந்த தூரம் தற்போது தாண்டப்பட்டுள்ளன.

திஸ்ஸமஹாராம தெபரவௌ தேசிய பாடசாலை மற்றும் ஜனாதிபதி கல்லூரிக்கு அருகாமையில் மதுபானசாலை ஒன்று உள்ளது. எனவே இந்த தூர எல்லைகளை உடனடியாக அதிகரிக்க வேண்டும். சுற்றுலாவை மேம்படுத்துவதாக கூறி பியர் அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

சில அரசியல்வாதிகள் இந்த பியர் அனுமதிப்பத்திரங்களை சுற்றுலா வலயங்களைத் தாண்டியும் வழங்கியுள்ளனர். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இந்த சபைக்கு சிகரெட், புகையிலை, மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்களை அழைத்து அவர்களுடன் நேருக்கு நேர் பேசி இது தொடர்பாக கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும். விருப்பமானால் சுய கட்டுப்பாட்டை அவர்களால் எடுக்க முடியும். இதன் மூலம் பாவனையை ஓரளவு குறைக்க முடியும்.

போதைப் பொருள் கடத்தல் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கும் இந்த கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யுத்தத்தில் வெற்றி பெற்ற நாட்டில் இந்த போதைப் பொருள் பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும். இதற்குத் தேவையான பூரண ஒத்துழைப்பை நாம் வழங்குவோம் என்றார்.

No comments:

Post a Comment