(எம்.ஆர்.எம்.வசீம்)
அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி இந்திய பிரதமர் மோடியிடம் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். அதனையே உள்நாட்டிலும் தெரிவித்திருந்தார். அதனால் 13 தொடர்பாக ஜனாதிபதியின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் திங்கட்கிழமை (04) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தம் இந்த நாட்டின் சட்டம். அதனால் 13 ஐ செயற்படுத்துவதற்கு ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறார்.
13 ஆம் திருத்தத்தை செயற்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் நிலைப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமரை சந்தித்து கலந்துரையாடியபோது தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
அதில் பொலிஸ் அதிகாரத்தை செயற்படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் பொலிஸ் அதிகாரம் தவிர ஏனைய அதிகாரங்களை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இந்திய பிரதமர் மோடியிடம் தெரிவித்திருந்தார்.
அதேபோன்று 13 ஆம் திருத்தத்தை செயற்படுத்துவதில் ஏதாவது தடைகள் ஏற்பட்டால், வடக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக தனியான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்வதாகவும் இந்திய பிரதமர் மோடியிடம் ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார்.
வேறு ஜனாதிபதிகள் 13 ஐ செயற்படுத்துவதில்லை என நாட்டுக்குள் தெரிவிக்கும் அதேநேரம் இந்தியாவுக்கு சென்று 13 பிளஸ் என தெரிவித்தும் வந்திருக்கிறார்கள். ஆனால் ரணில் விக்ரமசிங்க 13 தொடர்பாக நாட்டில் தெரிவித்து வரும் விடயங்களையே இந்திய பிரதமரிடமும் தெரிவித்திருக்கிறார்.
அதனால் அரசாங்கத்தில் இருக்கும் சிலர் அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தம் தொடர்பாக என்ன கருத்தை தெரிவித்தாலும் 13 தொடர்பாக ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஜனாதிபதியின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. 13 ஐ செயற்படுத்த வேண்டும் என்பதில் ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார் என்றார்.
No comments:
Post a Comment