அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், ஆசிரியருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், மாணவர்களுக்கு அஹ்னாப் ஜஸீம் புலிகளின் தலைவர் பிரபாகரன், நளீமியா கலாபீடத்தின் அஷ்ஷெய்க் அகார் முஹம்மது ஆகியோரின் உரைகளைக் காட்டி, தன்னிடம் கற்ற மாணவர்களிடையே அடிப்படைவாதத்தை தூண்டி, பிற மதத்தவர்கள் மீது பகைமை உணர்வை தூண்டியதாக முன் வைத்த குற்றச்சாட்டுக்களை இதுவரையிலான சாட்சியங்களால் நிரூபிக்க முடியாமல் போயுள்ளது.
அதன்படி வழக்கைத் தொடுத்த சட்டமா அதிபரே, இந்த வழக்கை முன்கொண்டு செல்வதா இல்லையா என தீர்மானம் ஒன்றுக்கு வரவுள்ளார். இதற்கான கால அவகாசம் புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொடவால், அரசின் சிரேஷ்ட சட்டவாதி உதார கருணாதிலகவின் கோரிக்கை பிரகாரம் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அஹ்னாப் ஜஸீம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சுமார் 579 நாட்களின் பின்னர் கடந்த 2021 டிசம்பர் 16 ஆம் திகதி 5 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 2020 மே 16 ஆம் திகதி இரவு 8 மணியளவில், சிலாவத்துறை, பண்டாரவெளியில் அமைந்துள்ள வீட்டில் வைத்து அஹ்னாப் ஜஸீம் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவருக்கு எதிராக கொழும்பு 8 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றில் பீ. 44230/20 எனும் இலக்கத்தின் கீழ் விசாரணை தகவல்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பின்னர் அதனை மையப்படுத்தி சட்டமா அதிபர் பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக கூறி புத்தளம் மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு இறுதியாக கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி வெள்ளியன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்குத் தொடுநர் சட்டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி உதார கருணாதிலக்க மன்றில் ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீமுக்காக சட்டத்தரணிகளான சஞ்சய் வில்சன் ஜயசேகர, ஹுஸ்னி ராஜித் ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆஜரானார்.
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாகக்கூறி, அஹ்னாப் ஜஸீமுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புத்தளம் - மதுரங்குளி பகுதியில் உள்ள எக்ஸலென்ஸி எனும் பெயரை உடைய பாடசாலை மாணவர்களுக்கு தீவிரவாத கொள்கைகளை ஊட்டி இன, மத, முரண்பாடுகள் மற்றும் பகை உணர்வினை தூண்டியதாக அதில் கூறப்பட்டிருந்தது.
ஒரே ஒரு குற்றச்சாட்டே சுமத்தப்பட்டிருந்த நிலையில், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் தான் நிரபராதி (சுற்றவாளி) என அஹ்னாப் ஜஸீம் அறிவித்துள்ளார். இதனையடுத்தே சாட்சி விசாரணைகள் தொடர்ந்தது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இறுதியாக கடந்த வெள்ளியன்று விசாரணையின்போது மொஹம்மட் நஸ்ருதீன் அக்மல், அப்துல் ரசாக் ஹசான் ஆகிய இரு சாட்சியாளர்கள் சாட்சியமளித்தனர்.
புத்தளம் மதுரங்குளி ஸ்கூல் ஒப் எக்சலன்ஸி பாடசாலையின் பழைய மாணவர்களான அவர்களுக்கு அவர்கள் க.பொ. த. சாதாரண தரம் கற்கும்போது, பிரதிவாதியான அஹ்னாப் ஜஸீம் தமிழ் பாடம் கற்பித்திருந்தார். அந்த காலப்பகுதியின்போதே அடிப்படைவாதம் போதிக்கப்பட்டதாக வழக்குத் தொடுநர் சட்டமா அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதன்படி கடந்த வாரம் புத்தளம் மேல் நீதிமன்றில் சாட்சியமளித்த குறித்த இரு சாட்சியாளர்களும், தங்களுக்கு அஹ்னாப் ஆசிரியர் கற்பித்தமை உண்மை எனினும் அவர் ஒரு போதும் பாடவிதானத்துக்கு அப்பாற்பட்ட, அடிப்படைவாத கருத்துக்களை சொல்லித்தரவில்லை என்பதை ஆணித்தரமாக குறிப்பிட்டனர்.
அரசின் சிரேஷ்ட சட்டவாதி உதார கருணாதிலக பல்வேறு விதமாக கேள்விகளைக் கேட்டபோதும் இரு சாட்சியாளர்களும், அஹ்னாப் அடிப்படைவாத விடயங்களை தமக்கு கற்பிக்கவில்லை என்பதை நீதிபதிக்கு தெரிவித்தனர்.
இதற்கு முன்னரும் சாட்சியமளித்த 3 சாட்சியாளர்கள், இதனை ஒத்த சாட்சியத்தையே நீதிமன்றில் அளித்திருந்தனர். இவ்வாறான நிலையில், கடந்த வெள்ளியன்று விசாரணையின்போது சாட்சிகள் குறுக்கு விசாரணைக்கு கூட உட்படுத்தப்படவில்லை. ஏனெனில் அவர்களது சாட்சியத்தில் அஹ்னாப் ஜஸீமுக்கு பாதகமான அல்லது எதிரான எந்த விடயங்களும் அடங்கியிருக்கவில்லை.
இந்த நிலையில் சாட்சி நெறிப்படுத்தலின் பின்னர் நீதிமன்றில் விஷேட விண்ணப்பம் ஒன்றினை முன்வைத்த அரசின் சிரேஸ்ட சட்டவாதி உதார கருணாதிலக, இவ்வழக்கின் பிரதான சாட்சியாளர்கள் 5 பேரின் சாட்சியம் நெறிப்படுத்தப்பட்டு முடிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
இதுவரை இவ்வழக்கின் 2,4,6,8,9 ஆம் இலக்க சாட்சியாளர்கள் சாட்சியமளித்துள்ள நிலையில், அவர்களின் சாட்சியத்தின் உள்ளடக்கத்தை கருத்தில் கொள்ளும்போது இவ்வழக்கை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டுமா எனும் கேள்வி எழுவதாகவும், அதனால் அது தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை மன்றுக்கு அறிவிக்க இரு மாத கால அவகாசத்தை வழங்குமாறும் அரச சட்டவாதி உதார கருணாதிலக கோரினார்.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட, வழக்கை எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி சட்டமா அதிபரின் நிலைப்பாட்டினை தெரிந்து கொள்வதற்காக விசாரணைக்கு அழைப்பதாக தெரிவித்து அத்திகதிவரை ஒத்தி வைத்தார்.
Vidivelli
No comments:
Post a Comment