மின்சார சபை கோரும் கட்டணத்திருத்தம் சட்டவிரோதமானது : பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 30, 2023

மின்சார சபை கோரும் கட்டணத்திருத்தம் சட்டவிரோதமானது : பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்

இலங்கை மின்சார சபை கோரும் கட்டணத் திருத்தம் சட்டவிரோதமானதென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

22 வீதம் அல்லது அனைத்து அலகுகளுக்கும் 8 ரூபா அதிகரிப்பு கோரப்பட்டுள்ளதாக ஜனக்க ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை கோரியுள்ள புதிய கட்டணத் திருத்தத்திற்கு அமைவாக, 0-30 அலகுகளுக்கு நுகர்வோர் செலுத்த வேண்டிய கட்டணம் 80 வீதத்தால் அதிகரிக்கப்படும்.

எவ்வாறாயினும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது இவ்வருடத்தில் மூன்றாவது தடவையாக மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதுடன், எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அவற்றை முன்வைக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார உற்பத்திக்காக செலவிடப்படும் தொகையை ஈடு செய்யும் வகையில் கட்டண திருத்தத்திற்கு அனுமதியளிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமற்போனதால், மின் உற்பத்திக்கு கூடுதல் செலவு ஏற்படும் என மின்சார சபை கூறியுள்ளது. இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் நீர் மின் திறன்4500 கிகாவாட் ஆகும்.

இலங்கை மின்சார சபையின் நிலைப்பாட்டின் அடிப்படையில், 3750 கிகாவாட் நீர் மின் உற்பத்தியை மாத்திரமே பெற முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையங்களிலிருந்து பற்றாக்குறையாகவுள்ள 750 கிகாவாட் நீர் மின் உற்பத்தியை பெறுவதற்கான கூடுதல் செலவை மீட்டெடுப்பதே மின் கட்டணத்தை அதிகரிப்பதன் நோக்கம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இது தொடர்பில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.

''2022 ஆம் அண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மின்சாரக் கட்டணம் 250 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மின்சார சபையின் முகாமைத்துவ பிழையினால் இறுதியில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கின்றனர். இது தவறான விடயமாகும். 

பூச்சியம் அலகில் இருந்து 30 அலகு வரை 80 வீதம் அதிகரிக்கப் போகிறார்கள். 31 முதல் 60 வரையான அலகிற்கு 31 ரூபாவாக உள்ள அலகை 33 ரூபாவாக அதிகரித்து, 32 வீத அதிகரிப்பையும் கோரியுள்ளனர். அதற்கு மேலான அலுகுகளுக்கு 25%, 22% மற்றும் 16 வீதமாக அதிகரிக்கவே யோசனை முன்வைத்துள்ளனர்''

No comments:

Post a Comment