அமெரிக்கத் தூதுவரை சந்தித்த சுமந்திரன் : மூன்று முக்கிய விடயங்கள் குறித்து எடுத்துரைப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, September 24, 2023

அமெரிக்கத் தூதுவரை சந்தித்த சுமந்திரன் : மூன்று முக்கிய விடயங்கள் குறித்து எடுத்துரைப்பு

ஆர்.ராம்

உள்நாட்டில் தொடரும் ஊழல், நீதிபதிகளை அச்சுறுத்தி நீதித்துறை மீதான அடைக்குமுறை, அரசியலமைப்பில் உள்ளவற்றையே நடைமுறைப்படுத்தாது நீடிக்கும் அதிகாரப்பகிர்வு இழுத்தடிப்பு சம்பந்தமாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்கிடத்தில் எடுத்துரைத்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கான விஜயத்தினை நிறைவு செய்து நாடு திரும்பியவுடன் இலங்கைகக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்கின் அழைப்பின் பேரில் சந்திப்பொன்றை சுமந்திரன் எம்.பி நடத்தியிருந்தார். குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்காவுக்கான விஜயத்தினை நிறைவு செய்து நாடு திரும்பியிருந்த நிலையில், அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்கின் அழைப்பின் பேரில் சந்திப்பொன்றை நடத்தியிருந்தேன். இதன்போது, முக்கியமாக மூன்று விடயங்கள் சம்பந்தமாக பேச்சுக்கள் நடத்தப்பட்டன.

முதலாவதாக, தொடர்ச்சியாக ஊழல் மோசடிகள் நடைபெறுவதோடு, ஏற்கனவே நடைபெற்ற பாரிய ஊழல் மோசடிகள் பற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்படாமை மற்றும் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படாமை உள்ளிட்ட விடயங்கள் என்னால் எடுத்துரைக்கப்பட்டன.

இரண்டாவதாக, நாட்டின் நீதித்துறை மீது, நிறைவேற்று அதிகாரத்துறையான ஜனாதிபதியும், சட்டவாக்கத்துறையும் அடக்குமுறையை பிரயோகித்து சுயதீனத்தன்மையை மறுதலிக்கின்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. குறிப்பாக, நீதிபதிகள் சிறப்புரிமைகளின் பெயரால் அச்சுறுத்தப்படுகின்றமை, கடுமையாக எதிர்மறையாக விமர்சிக்கப்படுதல் உள்ளிட்ட விடயங்கள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

மூன்றாவதாக, தமிழ் மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ள இனப் பிரச்சினைக்கான தீர்வினை முன்வைக்கும் விடயத்தில் அதிகாரப்பகிர்வு சம்பந்தமான உரையாடல்களை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்திருந்தாலும், அவர் காலத்தினை இழுத்தடிக்கும் செயற்பாட்டினையே முன்னெடுக்கின்றார். குறிப்பாக, அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வு தொடர்பான விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளபோதும், அதனை மீண்டும் பாராளுமன்ற அனுமதிக்காக கொண்டு செல்கின்ற செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றார் என்கின்ற விடயமும் எடுத்துக் கூறப்பட்டது.

இதனைவிடவும், தமிழ் மக்களின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் காணப்படுகின்ற தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் விரிவாக தெளிவுபடுத்தாப்பட்டது.

இச்சமயத்தில் அமெரிக்கத் தூதுவர் அனைத்து விடயங்கள் சம்பந்தமாகவும் விசேடமான கரிசனைகளைக் கொள்வதாக நம்பிக்கை அளித்துள்ளார் என்றார்.

No comments:

Post a Comment