மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய சந்தர்ப்பத்தில் எரிபொருள், எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை நியாயமற்றது - திஸ்ஸ அத்தநாயக்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 5, 2023

மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய சந்தர்ப்பத்தில் எரிபொருள், எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை நியாயமற்றது - திஸ்ஸ அத்தநாயக்க

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் அண்மைய அறிக்கையில் இலங்கையின் மிக மோசமான நிலைமை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய இந்த சந்தர்ப்பத்தில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை நியாயமற்றதாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (4) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய சந்தர்ப்பத்தில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை நியாயமற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணங்களின்போது இலங்கைக்கு நிவாரண உதவிகள் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவை மக்களை சென்றடைவதைக் காணக்கூடியதாக இல்லை.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் அண்மைய அறிக்கையில் இலங்கையின் மிக மோசமான நிலைமை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் தொகையைப் பெற்றுக் கொள்வதற்கான நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஸ்திரமான நிலைப்பாடு அறிவிக்கப்படவில்லை. அரசாங்கம் மக்களின் உண்மையான பிரச்சினைகளை இன்னும் இனங்காணவில்லை. ஏற்கனவே இனங்காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கவும் இல்லை. அதற்கான வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை.

இந்த ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக புதிய அரசியல் கூட்டணியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாராளுமன்றத்திலுள்ள கட்சிகளிடமும், பாராளுமன்றத்துக்கு வெளியிலுள்ள கட்சிகளிடமும் இது குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment