(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம். அவசர மருந்து கொள்வனவு ஊடாக பாரிய நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. மறுபுறம் தரமற்ற மருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களின் உறவினர்களே மருந்து கொள்வனவில் ஈடுபடுகிறார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (05) இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, அவசர மருந்து கொள்வனவு தொடர்பான மோசடியில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களின் உறவினர்கள் ஈடுபடுகிறார்கள். இதுவே உண்மை.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை பதவி விலக்கியதன் பின்னர் கெஹெலிய ரம்புக்வெல்ல பாகம் 2 வருகை தரும். ஆகவே உண்மையான பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை சுகாதாரத் துறையின் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தின் சம்பிரதாயங்கள் முழுமையாக மீறப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளுக்கு அமைய ஜனாதிபதி செயற்படுகிறார்.
நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்தும் வகையில் சட்டமூலத்தை இந்த வாரத்துக்குள் நிறைவேற்றித் தருமாறு ஜனாதிபதி சபாநாயகரை நோக்கி குறிப்பிடுகிறார். இவ்வாறான நிலையே தற்போது காணப்படுகிறது.
பொருளாதாரப் பாதிப்பு தொடரும் வரை சுகாதாரத் துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடரும். நாட்டு மக்கள் உணவு என்று குறிப்பிட்டுக் கொண்டு விஷத்தை உட்கொள்கிறார்கள்.
உணவு தரப்படுத்தல் நிறுவகம் சகல உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்தும் கப்பம் பெறுகிறது. நிறுவனங்களுக்கு ஏற்றாற்போல தரப்படுத்தல் செய்து அறிக்கை சமர்ப்பிக்கிறது.
நாட்டு மக்களுக்கு தரமான உணவை வழங்கினால் சுகாதாரத் துறையில் தோற்றம் பெற்றுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்றார்.
No comments:
Post a Comment