சனல் 4 வெளியிட்ட காணொளி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிரணியினர் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் - சார்ள்ஸ் நிர்மலநாதன் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 7, 2023

சனல் 4 வெளியிட்ட காணொளி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிரணியினர் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் - சார்ள்ஸ் நிர்மலநாதன்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

குருந்தூர் மலை, 2009 ஆம் ஆண்டு தமிழினம் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட காணொளி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிரணியினர் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். படுகொலை செய்யப்பட்ட தமிழினத்துக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, சனல் 4 விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் விசேட உரையாற்றியுள்ளார்கள். 2018 ஒக்டோபர் 26ஆம் திகதி நாட்டின் பிரதமர் பதவியை ராஜபக்‌ஷ தரப்பு கைப்பற்ற முயன்று தோல்வியடைந்தது. பின்னர் 2019 ஏப்ரல் 21 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்றதுடன் அதனை தொடர்ந்து கோத்தாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியானார்.

2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதல் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் அதற்கான சாட்சிகள் இல்லாவிட்டாலும் இங்குள்ள சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அவ்வாறு கூறப்படுகின்றது.

ஆனால் சனல் 4 தொலைக்காட்சி அதில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளளனர் என்ற விபரங்களை வெளியிட்டுள்ளனர். இதனால் இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இங்கு நடைபெறும் பல விடயங்கள் ஆட்சியாளர்களை தொடர்புபடுத்தியே நடக்கின்றன. குறிப்பாக ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் ரவிராஜ் ஆகியோர் கொல்லப்பட்டமை அரச இராணுவ புலனாய்வு ஒட்டுக் குழுக்களின் செயற்பாட்டின்படியே நடந்துள்ளது. இதனை யார் செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சாட்சிகள் சான்றுகளாக நிரூபிக்கப்படவில்லை. அதனை ஆட்சியாளர்களே விசாரிப்பதனால்தான் அதனை நிரூபிக்க முடியவில்லை.

சர்வதேச விசாரணையொன்றை எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார். இதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் 2009 ஆம் ஆண்டு மிருகத்தனத்திற்கும் மேலாக எம் இன மக்கள் கொன்றழிக்கப்பட்டனர். அதனையும் சனல் 4 வெளியிட்டிருந்தது.

இசைப்பிரியா புலிகளின் குரல் வானொலியில் பணியாற்றினார் என்பதற்காக அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி மிகவும் கொடூரமாக கொலை செய்த வீடியோ வெளியாகியிருந்தது. அந்த விடயத்தை பலமுறை இந்த சபையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர். இந்நிலையில் ஈஸ்டர் தாக்குதல் ஆட்சி மாற்றத்திற்காக நடந்தது என்று சர்வதேச விசாரணையை கோருகின்றார்.

இந்நிலையில் 2009 ஆம் ஆண்டில் சர்வதேச தரவுகளின்படி நாற்பதாயிரம் பேர் என்று கூறினாலும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் உள்ளிட்டோர் கொன்றொழிக்கப்பட்டனர். இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவரின் கருத்து என்ன என்று கூற வேண்டும்.

அதேபோன்று 2019 ஆம் ஆண்டில் வடக்கு ஆட்சி மாற்றத்தின் பின்னர் கோத்தாபய ராஜபக்‌ஷ வடக்கு, கிழக்கில் பௌத்த மயமாக்கலை அங்கு தமிழ் இனப்பரம்பலை இல்லாது செய்ய சட்ட ரீதியாக பல முனைப்புகளை அவர் முயற்சித்தார்.

தொல்பொருள் திணைக்களத்தில் கிழக்கு மாகாணத்திற்கென செயலணியை உருவாக்கினார். தமிழர்கள் பூர்வீகம் என்ற சான்றுகளை இல்லாது செய்ய அந்த செயலணியை நிருவினார். அதன் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலையில் இன ரீதியில் மக்கள் முரண்படும் வகையில் அந்த பிரதேசத்தில் ஆதிசிவன் அடையாளங்களை அழித்து பௌத்த விகாரையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று திருகோணமலையில் விகாரைகள் அமைப்பது தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கோ, தமிழ் மக்களுக்கோ பௌத்த மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. எப்போதும் பௌத்த மக்களையோ, சிங்கள மக்களையோ தமிழர்கள் ஆள வேண்டும். விடுதலைப் புலிகள் ஆள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இருந்ததில்லை.

2019 ஈஸ்டர் தாக்குதல் ஊடாக ஆட்சியை கைப்பற்ற சிங்கள மக்களை எப்படி ஏமாற்றினார்களோ அதேபோன்றுதான் 1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க தமிழ், சிங்கள சட்டத்தை கொண்டு வந்ததில் இருந்து தமிழர்களுக்கு எதிராக பொய்யான கதைகளை கூறி தமிழர்கள் மீது பல நாடுகளில் இருந்து பணத்தை பெற்று போர் தொடுத்தனர். இதனால் நாடு பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ளது.

1956 ஆம் ஆண்டில் தனிச் சிங்கள சட்டமூலத்தை கொண்டு வந்து பின்னர் பல்கலைக்கழகங்களில் தமிழர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. இதனாலேயே ஆயுதம் ஏந்தி போராடினர். இந்நிலையிலேயே ஆட்சியாளர்கள் தமிழர்களை இலங்கையில் இருந்து அகற்ற வேண்டும் என்று செயற்படுகின்றனர்.

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி, அமைச்சர் உள்ளிட்ட பல தரப்பினருடன் கலந்துரையாடிய போதும் இன்னும் தீர்வுகள் கிடைக்கவில்லை. சான்றுகளின் அடிப்படையில் சர்வதேச ஆய்வு அவசியமாகும். அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர் குரூந்தூர் மலையில் நடந்த விடயம் தொடர்பில் என்ன கருத்தை கூறுகின்றார் என்று கேட்கின்றேன்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை கோரி கத்தோலிக்க மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள அவர் முயற்சிக்காது 2009 இல் தமிழினம் அழிக்கப்பட்டமை தொடர்பான சனல் 4 வீடியோ தொடர்பிலும் எதிர்க்கட்சி நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment