ஆர்.ராம்
சனல் 4 ஊடக நிறுவனத்திற்கு அரசாங்கம் சார்பில் உத்தியோகபூர்வமாக பதிலளிப்பதற்கு பல தரப்பினரும் வலியுறுத்தியுள்ள நிலையில் எதிர்வரும் நாட்டிகளில் நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்பு சபையின் தீர்மானத்தினை அடுத்து அமைச்சரவை இறுதித் தீர்மானத்தினை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் சம்பந்தமாக ஆளும் தரப்பின் பிரதம கொரடாவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தொடர்பில் சனல் 4 ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது.
இந்த நிறுவனமானது, தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாகவும் அவர்களின் கொள்கைகளை முன்னெடுக்கின்ற புலம்பெயர் அமைப்புக்களுக்கு ஆதரவாகவும் செயற்பட்டு வருகின்றது.
மேலும், ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பிபதற்கு முன்னதாக இவ்வாறான காணொளிகளை வெளியிட்டு, நாட்டின் அபிமானத்தையும், படையினரின் கௌரவத்தையும் தொடர்சியாக குறைமதிப்புக்கு உட்படுத்தி வருகின்றது.
ஆகவே, சனல் 4 நிறுவனம் இவ்வாறு தொடர்ச்சியாக செயற்படுவதற்கு இடமளிக்க முடியாது. ஆகவே இலங்கை அரசாங்கம் என்ற வகையில் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு செயற்படும் அந்த நிறுவனத்திற்கு உரிய பதிலை வழங்குவதே பொருத்தமானது என்று பலரும் வலியுறுத்தினார்கள்.
இதனடிப்படையில் அடுத்து வரும் நாட்களில் தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் விடயங்களின் பின்னரேயே அமைச்சரவை இறுதி தீர்மானத்தினை எடுக்கவுள்ளது என்றார்.
No comments:
Post a Comment