சுப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இலங்கை அணி (HIGHLIGHTS) : அடுத்த சுற்றுக்காக இறுதி வரை போராடிய ஆப்கான் அதிர்ச்சித் தோல்வி : எஞ்சிய பந்துகளிலான வாய்ப்புகள் தொடர்பில் வீரர்களுக்கு விளக்கமில்லை - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 6, 2023

சுப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இலங்கை அணி (HIGHLIGHTS) : அடுத்த சுற்றுக்காக இறுதி வரை போராடிய ஆப்கான் அதிர்ச்சித் தோல்வி : எஞ்சிய பந்துகளிலான வாய்ப்புகள் தொடர்பில் வீரர்களுக்கு விளக்கமில்லை

16ஆவது ஆசிய கிண்ண கிரிக்கட் தொடர் கடந்த 30ஆம் திகதி பாகிஸ்தானில் ஆரம்பமான நிலையில் தொடரின் குழு நிலை போட்டிகளின் இறுதி போட்டி நேற்று (05) லாஹூரின் கடாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் ஆடிய இலங்கை அணி, நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 291 ஓட்டங்களை குவித்தது. 

இலங்கை அணி சார்பாக தொடர்ந்து பிரகாசிக்க தவறி வந்த குசல் மெண்டிஸ் இப்போட்டியில் மிக அருமையாக ஆடி இலங்கை அணி சார்பாக அதிகபட்ச ஓட்டமாக 92 ஓட்டங்களை பெற்றதோடு, பெத்தும் நிஸ்ஸங்க 41 ஓட்டங்களையும், சரித் அசலங்க 36 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியபோது இறுதி நேரத்தில் நேர்த்தியாக ஆடி துனித் வெல்லால்லகே 33 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமல் பெற்றார். அவருக்கு உறுதுணையாக ஆடிய சுழற்பந்து நட்சத்திரம் மஹீஷ் தீக்ஷண 28 ஓட்டங்களை பெற்றார்.

பதிலுக்கு 292 ஓட்டங்களை 37.1 ஓவர்களில் பெற்றால் ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்கு தெரிவாகலாம் என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட களமிறங்கிய நிலையில், 39.4 ஓவர்களில் 289 ஓட்டங்களை பெற்று வாய்ப்பை தவறவிட்டதோடு, சகல விக்கட்டுகளையும் இழந்து 2 ஓட்டங்களால் தோல்வியையும் தழுவியது.

இதன் மூலம் இலங்கை அணி ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

சுப்பர் 4 சுற்றில் இலங்கை அணி எதிர்வரும் 09ஆம் திகதி பங்களாதேஷ் அணியையும் 12ஆம் திகதி இந்திய அணியையும் 14ஆம் திகதி பாகிஸ்தான் அணியையும் எதிர்கொண்டு விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து 12 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று புதிய உலக சாதனையை இலங்கை அணி படைத்துள்ளது.

இதேவேளை இப்போட்டியில் நிகர ஓட்ட சராசரியின் (NRR) அடிப்படையில் 37.1 ஓவர்களில் 292 ஓட்டங்களை பெற்றால் சுப்பர் 4 சுற்றுக்கு செல்ல முடியும் என அறிவிக்கப்பட்ட போதிலும், அவ்வாய்ப்பு,

37.2 ஓவர்களில் 293 ஓட்டங்கள்
37.3 ஓவர்களில் 294 ஓட்டங்கள்
37.4 ஓவர்களில் 295 ஓட்டங்கள்
37.5 ஓவர்களில் 295 ஓட்டங்கள் (நாணயச் சுழற்சி மூலம்)
38.0 ஓவர்களில் 296 ஓட்டங்கள்
38.2 ஓவர்களில் 297 ஓட்டங்கள் என செல்கின்றது என்பதை ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் அறிந்திருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இஷ்ரத் இம்தியாஸ்

No comments:

Post a Comment