இலங்கை நெருக்கடிக்குள்ளாகும் : 27ஆம் திகதி தீர்மானமிக்கது - சம்பிக்க ரணவக்க - News View

About Us

About Us

Breaking

Monday, September 18, 2023

இலங்கை நெருக்கடிக்குள்ளாகும் : 27ஆம் திகதி தீர்மானமிக்கது - சம்பிக்க ரணவக்க

(இராஜதுரை ஹஷான்)

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு வெற்றி பெற்றாலும்,தோல்வியடைந்தாலும் இலங்கை நெருக்கடிக்குள்ளாகும். எதிர்வரும் 27ஆம் திகதி தீர்மானமிக்கது. தவறான பொருளாதார கொள்கையினால் தீவிரமடைந்துள்ள மூளைசாலிகள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தில் எரிபொருள், எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கப் பெறுகிறது. ஆகவே, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு விட்டோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகும்.

வங்குரோத்து நிலைக்கு பின்னணியில் வெளிநாட்டு கடன்கள் மற்றும் அவற்றுக்கான வட்டி ஆகியவற்றை திருப்பிச் செலுத்தாமல்தான் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

பெற்றுக் கொண்ட அரசமுறை கடன்களை தொடர்ந்து செலுத்தாமல் இருக்க முடியாது. வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்துக் கொள்ள நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டங்களையும் அரசாங்கம் செயற்படுத்தவில்லை.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தற்போது இடம்பெறுகிறது. எதிர்வரும் 27 ஆம் திகதி தீர்மானமிக்கது. வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்வரும் வாரத்துக்குள் ஒரு இணக்கப்பாட்டு தீர்மானத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு வெற்றியடைந்தால் ஒப்பீட்டளவில் வெளிநாட்டு கடன்களை முறையாக செலுத்த வேண்டும். மறுபுறம் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தோல்வியடைந்தால் நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நிதியுதவி கிடைக்காம் போகும். ஆகவே வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.

அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவ கொள்கையினால் மூளைசாலிகள் நாட்டை விட்டு நாளாந்தம் வெளியேறுகிறார்கள்.

கடந்த மாதங்களில் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் விரிவுரையாளர்கள் ஈடுபடுவது பிரச்சினைக்குரியதாக இருந்தது. எதிர்வரும் காலங்களில் வினாத்தாள் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுவதற்கு கூட விரிவுரையாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும்.

நாட்டில் தீவிரமடைந்துள்ள மூளைசாலிகள் வெளியேற்றத்தை தடுக்க நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டங்களையும் அரசாங்கம் செயற்படுத்தவில்லை என்றார்.

No comments:

Post a Comment