ரணிலை தற்காலிக ஜனாதிபதியாகவே தெரிவு செய்துள்ளோமே தவிர 2029 வரை பதவியில் இருப்பதற்கல்ல - எஸ்.எம். சந்திரசேன - News View

About Us

About Us

Breaking

Monday, September 25, 2023

ரணிலை தற்காலிக ஜனாதிபதியாகவே தெரிவு செய்துள்ளோமே தவிர 2029 வரை பதவியில் இருப்பதற்கல்ல - எஸ்.எம். சந்திரசேன

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணியமைக்கும் நோக்கம் கிடையாது. மாறுபட்ட கொள்கைகளை கொண்டுள்ள அரசியல் கட்சிகள் ஒன்றிணையும்போது நல்லாட்சி அரசாங்கத்தின் நிலைமையே தோற்றம் பெறும். தேசிய தேர்தல்களில் தனித்து போட்டியிடவே தீர்மானித்துள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

அநுராதபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தை எதிர்க்கட்சியினர் தங்களின் அரசியல் பிரசாரத்துக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். பாராளுமன்றத்தில் கடந்த வாரம் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் அரசியல் சேறு பூசல்களை மாத்திரம் இலக்காகக் கொண்டிருந்தார்கள்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றியை உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்படுத்தி எதிர்க்கட்சியினர் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தில் ஒரு சில குறைபாடுகள் காணப்பட்டாலும் அவர் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தினார் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணியமைத்து தேர்தல்களில் போட்டியிட பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக ஆளும் தரப்பின் ஒரு சிலர் குறிப்பிடுவது அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடே தவிர கட்சியின் நிலைப்பாடல்ல, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தற்காலிக ஜனாதிபதியாகவே தெரிவு செய்துள்ளோமே தவிர 2029 ஆம் ஆண்டு வரை பதவியில் இருப்பதற்கல்ல என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கொள்கைக்கும் பொதுஜன பெரமுனவின் அரசியல் கொள்கைக்கும் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

மாறுபட்ட அரசியல் கொள்கைகளை கொண்டுள்ள இரு கட்சிகளும் கூட்டணியமைத்து அரசாங்கத்தை அமைத்தால் நல்லாட்சி அரசாங்கத்தின் நிலைமையே தோற்றம் பெறும்.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைத்து போட்டியிட இதுவரை தீர்மானிக்கவில்லை. கட்சியின் கொள்கைகளை முன்னிலைப்படுத்தி தனித்து போட்டியிடவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment