இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு அங்கவீனர்களின் உரிமைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொள்வது பற்றிய உணர்திறன் மிக்க மற்றும் தகவல்களைப் பரிமாறும் அமர்வொன்றை அண்மையில் நடத்தியிருந்தது.
குறித்த விசேட பாராளுமன்றக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே வருகை தராத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் குழு கூடியபோதே இந்த அமர்வு இடம்பெற்றது.
தேசிய ஜனநாயக நிறுவனத்தின் அங்கவீனர்களை உள்ளடக்குவது தொடர்பான சர்வதேச ஆலோசகர் நிடாகே ரீஜ் இந்த அமர்வை முன்னெடுத்திருந்தார்.
அங்கவீனம் உற்றவர்களின் உரிமைகளை உறுதிசெய்வதற்கு நிறுவனம் என்ற ரீதியில் பாராளுமன்றம் எவ்வாறு முற்போக்கான முறையில் செயற்பட முடியும் என்பது பற்றி அவர் கவனம் செலுத்தியிருந்தார்.
உலகளாவிய ரீதியில் ஏறத்தாழ 1 மில்லியன் பேர் அங்கவீனத்துடன் வாழ்ந்து வருவதாகவும், இது உலக சனத் தொகையில் 15% என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் அங்கவீனம் உற்றோரில் முக்கால்வாசிப் பேர் பெண்கள் என்பதும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த அமர்வில் பங்குபற்றியவர்களின் ஊக்கமான பங்களிப்பு இதனை வினைத்திறன் மிக்கதொரு அமர்வாக மாற்றியிருந்தது.
இதில் இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சீதா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான இரான் விக்ரமரத்ன, ரோஹினி குமாரி விஜேரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment