இந்து மற்றும் பௌத்த மக்களுக்கிடையில் மத ரீதியான மோதலை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல் செயற்படுத்தப்படுவதாக, நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இத்தகைய மோதலை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் ஆதரவை தடுத்து நிறுத்த முடியுமென்று எதிர்க்கட்சிகள் நினைத்து வருவதாகவும், அமைச்சர் வலியுறுத்தினார்.
எனவே, இந்த விடயத்தை மிகவும் புத்திசாலித்தனமாக எதிர்கொள்ள வேண்டுமெனவும், அமைச்சர் தெரிவித்தார்.
கம்பஹா லக்சியனே மதுரவில் நேற்றுமுன்தினம் (29) நடைபெற்ற கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மேலும் தெரிவித்த போது, “கொரோனா தொற்றுக் காரணமாக நாடு ஓரளவு பின்னடைவை சந்தித்துள்ளது. நாட்டுக்கு முதலீடுகள் வரவில்லை. அபிவிருத்தித் திட்டங்கள் செயற்படுத்தப்படவில்லை. ஆனால், இப்போது நிலைமை வேறு.
முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருகிறார்கள். அபிவிருத்திப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டுக்குள் அதாவது, பட்ஜெட்டுக்கு பின்னர், நாடு இயல்பு நிலைக்கு திரும்ப முடியுமென்று நாங்கள் நம்புகிறோம்.
தேர்தல் என்பது வேறு விடயம். கடந்த காலங்களில் விடுபட்ட பணிகளை புதுப்பிக்கும் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். உதாரணமாக, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு அனைத்து எம்.பி.க்களும் கட்சி வேறுபாடின்றி அழைக்கப்பட்டுள்ளனர். அந்த வேலையை பற்றி பேசுங்கள்.
முதலில் கிராமத்திலுள்ள மக்களின் தேவைகளை கண்டறிய வேண்டும். அவை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசப்பட வேண்டும். மற்றபடி கொழும்பின் அறைகளுக்குள் இருந்து கொண்டு செய்யப்படும் அபிவிருத்தி திட்டங்கள் கிராமத்துக்கு பிரயோசனம் இல்லை. எனவே, அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும்.
அரசாங்கம் மற்றும் மாகாண சபைகள் அனைத்தும் ஒரே முறையை பின்பற்ற வேண்டும். கிராமியக் குழுவின் கருத்துக்களுக்கேற்ப மத்திய அரசாங்கமும் மாகாண சபைகளும் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அதனால், யாருக்கும் பிரச்சினை இல்லை.
மாகாணத்தின் தேவைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அந்த மாகாண சபைகளை மக்கள் நிராகரிப்பார்கள். எனவே, இந்த நிறுவனங்கள் அரசின் கொள்கை கட்டமைப்புக்குள் செயற்பட வேண்டும். அதன் பின்னர் எந்த பிரச்சினையும் இருக்காது.
எந்த வேலையும் செய்யாவிட்டால் மாகாண சபை வெள்ளை யானை. நாம் அதை வேலை செய்யும் நிலைக்கு கொண்டுவர வேண்டும். நிர்வாக அதிகாரம் பிரிக்கப்பட்டால் அந்த மாகாண மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
நான் மாகாண சபையில் இருந்த போதும், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் சில சந்தேகங்கள் எழுந்துள்ளதாக கூறினேன். அவ நம்பிக்கையுடன் வேலைக்குச் சென்றால் பிரச்சினைகள் வரும்.
எனவே, அந்த இரண்டையும் ஒதுக்கி வைத்துவிட்டு மற்ற அமைச்சுகளின் நிர்வாக அதிகாரங்களை பிரிக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளோம். அதை எப்படி செய்வது என்று கலந்தாலோசிக்க ஒரு திட்டம் தேவை.
சிலர் இந்த நாட்டில் அவ்வப்போது நெருக்கடிகளை உருவாக்குகிறார்கள். தற்போது மதங்களுக்கு இடையே பிரச்சினைகள் தொடங்கியுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது கிறிஸ்தவ தேவாலயங்களை குறிவைத்து சில முஸ்லிம் குழுக்கள் நடத்திய தாக்குதல். இப்போது இந்து - பௌத்த மோதலை உருவாக்க முயற்சிக்கின்றனர்.
எதிர்க்கட்சிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல் இந்தியாவிடமிருந்து எங்களின் ஆதரவை நிறுத்தும் வகையில் செயற்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒரு இந்து. அதனாலேயே, சிலர் மத மோதலை உருவாக்க முயற்சிக்கின்றனர். இந்தப் பிரச்சினையை நாம் மிகவும் புத்திசாலித்தனமாக எதிர்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment