ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழு ஒத்துழைப்பு : நடைமுறைப்படுத்தவும் ஆதரவு என்கிறார் அங்கஜன் எம்பி - News View

About Us

About Us

Breaking

Thursday, August 3, 2023

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழு ஒத்துழைப்பு : நடைமுறைப்படுத்தவும் ஆதரவு என்கிறார் அங்கஜன் எம்பி

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் முன்னெடுக்கப்படும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்குமென கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 ஆவது திருத்தம் தொடர்பான விவாதமொன்றை பாராளுமன்றத்தில் நடத்த உள்ளார். இது தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, அன்றிலிலிருந்து இன்று வரை சாதகமான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது. 

கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருர் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவும், நானும் கலந்து கொண்டோம்.

எமது கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில், கட்சியின் வெளிப்படைத் தன்மையை வௌிப்படுத்தினார். கட்சியின் விருப்பத்தையும் இதன்போது வௌிப்படுத்தினோம்.

ஆனால், 13 ஆவது திருத்தத்தில் என்னென்ன விடயங்களைப் பற்றி பேசப்படும் அல்லது நடைமுறைப்படுத்தவுள்ளவற்றை தெளிவாகச் சமர்ப்பியுங்களென ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.

முப்பது வருட யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ளன. ஆனால் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு இதுவரை முன்வைக்கப்படவில்லை.

இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் பிகாரம் அரசியலமைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 13 ஆவது திருத்தம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13ஆவது திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். 

எமது கட்சியின் தலைவர் முன்னர் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில், எமது செயற்பாடுகள் பாராளுமன்றத்தில் அமையுமென அவர் மேலும் தெரிவித்தார்.

கோப்பாய் குறூப் நிருபர்

No comments:

Post a Comment