(எம்.வை.எம்.சியாம்)
ஹோமாகம பகுதியில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (17) இரவு பரவிய தீ கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை (18) அதிகாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
பொலிஸார், இராணுவம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர், ஹொரணை தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீப்பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஹோமாகம, கட்டுவான பகுதியில் அமைந்துள்ள நிறப்பூச்சு உற்பத்தி செய்யும் கைத்தொழில் பேட்டையில் நேற்று வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர், ஹொரணை தீயணைப்பு பிரிவினர் இணைந்து சுமார் 8 மணித்தியாலங்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் உயிர்ச்சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை. எவ்வாறாயினும் தீயினால் தொழிற்சாலை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
குறித்த தொழிற்சாலையில் காணப்பட்ட இரசாயன திரவியங்கள் வெடித்தமையாலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் தொழிற்சாலையை சூழவுள்ள பகுதிகளுக்கு வீணாக செல்ல வேண்டாம் எனவும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும், தொழிற்சாலையில் பரவிய தீப் பரவல் குறித்து ஆராய்வதற்காக விசேட குழுவொன்று வெள்ளிக்கிழமை முற்பகல் சம்பவ இடத்துக்கு சென்றதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
தீப் பரவல் காரணமாக காற்றின் தரத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்தார்.
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் முதல் இயங்கி வரும் குறித்த தொழிற்சாலை மற்றும் களஞ்சியசாலைகளுக்கு உரிய அனுமதிப்பத்திரம் வழங்கவில்லை. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment