ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஒரு சில அமைச்சுக்களின் கீழுள்ள நிறுவனங்கள் மற்றும் விடயதானங்கள் திருத்தப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், முறையே போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழிருந்த சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் (Sahasya Investment Ltd) மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சகத்தின் கீழிருந்த தேசிய உபகரணங்கள் மற்றும் இயந்திர நிறுவனம் (National Equipment and Machinery Organization) ஆகியன, ஜனாதிபதியின் கீழுள்ள நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதேவேளை, நாட்டில் கால்நடைத் தீவனத்திற்காக சோளம் பயிரிடுவது விவசாய அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழிருந்த திரிபோஷ உற்பத்தி மற்றும் கால்நடை தீவனத்திற்கு தேவையான சோளம் பயிரிடல் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
குறித்த விடய மாற்றங்கள் ஜூலை 31, திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வருவதாக அவ்வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 44ஆவது சரத்தின் உப பிரிவு (1) இன் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் குறித்த அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அவை தவிர் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், பெருந்தோட்ட கைத்தொழில், விவசாயம், நீதித்துறை, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம், புத்த சாசனம், மத விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்களின் விடயதானங்களிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புனர்வாழ்வு பணியகம் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இருந்த தொலைதூர கிராமப்புறங்களில் பொருத்தமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் விடயம் நீக்கப்பட்டு, தனி நபர் கண்ணிவெடித் தடைச் சட்டம் இணைக்கப்பட்டுள்ளது.
புத்தசாசன, மத அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ், அமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் அமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி மைய சட்டம் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment