தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளர் சுதர்மா நெத்திகுமாரவின் வீட்டுப் பணிப் பெண், வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் (29) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த பெண் உயிரிழந்த தினத்தன்று, கைது செய்யப்பட்ட உப பொலிஸ் இன்ஸ்பெக்டர், வெலிக்கடை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.
பதுளை தெமோதர பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஆர்.ராஜகுமாரி என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
ராஜன் ராஜகுமாரி, கூர்மையற்ற ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டிருந்தது.
தமது வீட்டில் பணி புரிந்தபோது தங்க நகையை திருடியதாக தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளர் சுதர்மா நெத்திகுமார, வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டிற்கு அமைய கடந்த மே மாதம் 11 ஆம் திகதி 42 வயதான ஆர்.ராஜகுமாரி வெலிக்கடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட தினத்தன்று இரவு ஆர்.ராஜகுமாரி வெலிக்கடை பொலிஸாரினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் கணவர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து தனது மனைவியின் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்தமைக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
No comments:
Post a Comment