ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மக்களாணையுடன் மீண்டும் தோற்றுவிப்போம் - நாமல் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 30, 2023

ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மக்களாணையுடன் மீண்டும் தோற்றுவிப்போம் - நாமல்

(இராஜதுரை ஹஷான்)

ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மக்களாணையுடன் மீண்டும் தோற்றுவிப்போம். ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து புறக்கணிக்க ஒரு தரப்பினர் இன்றும் முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மொனராகலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உலகில் எந்த நாடும் சேதனப்பசளைத் திட்டத்தை விவசாயத்துறையில் முழுமையாக அமுல்படுத்தவில்லை. எமது அரசாங்கம் சேதனப்பசளைத் திட்டம் தொடர்பில் எடுத்த தவறான தீர்மானம் விவசாயத்துறையில் பாரிய எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியது.

விவசாய குடும்ப பின்னணியை கொண்ட ராஜபக்ஷர்கள் விவசாயத்துக்கு எதிராக ஒருபோதும் செயற்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசிய உற்பத்தியை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கினார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு சேதனப்பசளைத் திட்டம் தொடர்பில் காலி முகத்திடல் போராட்டக்களத்தில் மூன்றாம் தரப்பு போராட்டக்காரர்களாக கலந்துகொண்டவர்கள் ஆலோசனை வழங்கிருப்பார்களா என்ற சந்தேகம் காணப்படுகிறது. ஏனெனில் விவசாயத்துறையின் நெருக்கடி ஊடாக போராட்டங்கள் தோற்றம் பெற்றன. போராட்டத்தை தொடர்ந்து நாங்கள் பதவி விலகினோம். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு ஏதும் நிறைவேற்றப்படவில்லை. இதவே யதார்த்தம்.

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினோம். ஜனாதிபதியின் புதிய லிபரல்வாத கொள்கை நாட்டு மக்களுக்கு பயனுடையதாக அமைய வேண்டும்.

போராட்டத்தின் ஊடாக ராஜபக்ஷர்களை ஒருபோதும் வீழ்த்த முடியாது. மக்களாணையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம். ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து புறக்கணிக்க ஒரு தரப்பினர் இன்றும் முயற்சிக்கிறார்கள். மஹிந்த ராஜபக்ஷ மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை நாங்கள் பாதுகாப்போம் என்றார்.

No comments:

Post a Comment