அரசாங்கம் 13 ஐ கொண்டு வரட்டும், அதன் பின் செய்ய வேண்டியதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் - எல்லே குணவங்ச தேரர் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 30, 2023

அரசாங்கம் 13 ஐ கொண்டு வரட்டும், அதன் பின் செய்ய வேண்டியதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் - எல்லே குணவங்ச தேரர்

(இராஜதுரை ஹஷான்)

ஒரு தரப்பினரின் பிரச்சினைகளுக்கு மாத்திரம் தீர்வு காண அரசாங்கம் முயற்சிப்பதை கடுமையாக எதிர்ப்போம். முதலில் 13 ஆவது திருத்த அமுலாக்க திட்டத்தை அரசாங்கம் கொண்டு வரட்டும், அதன் பின் செய்ய வேண்டியதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (29) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தினால் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. நாட்டில் முதலில் இனப் பிரச்சினை என்பதொன்று உள்ளதா? என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். இல்லாத பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவது தற்போதைய பிரச்சினைகளுக்கு பிரதான காரணியாக உள்ளது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏதாவதொரு பிரச்சினை உள்ளது. வங்குரோத்து நிலைக்கு மத்தியில் ஒரு தரப்பினரது பிரச்சினைகளுக்கு மாத்திரம் தீர்வு காண அரசாங்கம் முயற்சித்தால் அதை கடுமையாக விமர்சிப்போம். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த அமுலாக்கத் திட்டத்தை அரசாங்கம் முதலில் கொண்டு வரட்டும் அதன் பின் செய்ய வேண்டியதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்ததை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏதும் கிடையாது. அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக முரண்பாடுகளை தோற்றுவிக்காமல் இருந்தால் பிரச்சினைகள் தோற்றம் பெறாது.

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு தேசிய வளங்களை தனியார் மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இருக்கும் வளங்களை விற்பது, கடன் பெறுவது ஆகியன மாத்திரம் அரசாங்கம் பொருளாதார கொள்கையாக காணப்படுகிறது. தேசிய வளங்களை தனியார் மயப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம் என்றார்.

No comments:

Post a Comment