எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது : பல்வேறு குறைபாடுகள் என்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க - News View

About Us

About Us

Breaking

Sunday, June 11, 2023

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது : பல்வேறு குறைபாடுகள் என்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க

(எம்.மனோசித்ரா)

தேசிய எல்லை நிர்ணய குழுவின் செயற்பாடுகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. எனவே, அதன் அறிக்கையை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. புதிய எல்லை நிர்ணயத்துக்கமைய, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த இடமளிக்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய எல்லை நிர்ணயத்துக்கமைய அரசாங்கம் தேர்தலை நடத்த முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் வினவியபோது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம், அக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள எல்லை நிர்ணயம் தொடர்பில் பல தரப்பினராலும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில், அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்குமாயின், அது சட்டத்துக்கு முரணானதாகும்.

எனவே, அரசாங்கத்துக்கோ அல்லது தேர்தல் ஆணைக்குழுவுக்கோ உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்கனவே கோரப்பட்டுள்ள வேட்பு மனுக்களை இரத்து செய்யவோ, வேட்பாளர்களிடம் கட்டுப்பணத்தை மீளச் செலுத்தவோ முடியாது. சட்ட ரீதியில் அது இலகுவான விடயமல்ல.

காரணம், புதிய எல்லை நிர்ணயத்தை பாராளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும். ஆனால், எந்தவொரு அரசியல் கட்சியும் அதனை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இல்லை. அவ்வாறிருக்கையில், இது குறித்த சட்டமூலத்தை எவ்வாறு நிறைவேற்ற முடியும்?

மாறாக, இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமையில் மீண்டும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். அடுத்த ஒரு வருடத்தில் கூட இதனை செய்ய முடியாது. எனவே, வார்த்தைகளால் கூறுவதைப் போன்று அது இலகுவான விடயமல்ல. தேர்தல் ஆணைக்குழுவும் உண்மைகளை பகிரங்கமாக கூற முடியாத நிலையில் உள்ளது என்றார்.

No comments:

Post a Comment