சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தில் வறியவர்களைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளில்லை - விசனம் வெளியிட்டுள்ள சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 8, 2023

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தில் வறியவர்களைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளில்லை - விசனம் வெளியிட்டுள்ள சுமந்திரன்

(நா.தனுஜா)

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைவாக முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்புக்கள் மற்றும் செயற்திட்டங்களில் வறிய மற்றும் பின்தங்கிய சமூகப் பிரிவினரைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் உள்ளடங்காமை தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், தேர்தல் பிற்போடப்படல் உள்ளிட்ட நாட்டின் ஜனநாயகத்துடன் தொடர்புபட்ட அரசியல் விவகாரங்களை சர்வதேச நாணய நிதியம் கருத்திற்கொள்ளாமை குறித்து விசனம் வெளியிட்டுள்ளார்.

கலாநிதி என்.எம்.பெரேராவின் 118 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் அமைந்துள்ள சமூக மற்றும் சமய நிலையத்தில் 'விரிவான ஜனநாயக மறுசீரமைப்பை நோக்கிய பாதை' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு விசனம் வெளியிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, தற்போது நாட்டில் விரிவான ஜனநாயக மறுசீரமைப்பு ஏன் அவசியம்? ஏனெனில் இப்போது நாம் தோல்வியடைந்த நாடாக மாறியிருக்கின்றோம். சிலர் அதனை ஏற்றுக் கொள்வதற்கு மறுத்தாலும், வெட்கப்பட்டாலும் அதுதான் உண்மை.

எனவே தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளை அரசியல் சார்ந்து நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லுறவு ஆகிய இரு கோணங்களிலும், பொருளாதாரம் சார்ந்து பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் ஊழல் மோசடிகளுக்கான வாய்ப்பு ஆகிய இரு கோணங்களிலும் அணுக வேண்டியுள்ளது. இவ்வாறு அணுகுவதன் ஊடாக நாட்டின் தற்போதைய நெருக்கடிகளுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

பல வருடங்களுக்கு முன்னர் பல்வேறு துறைகள் சார்ந்து வகுக்கப்பட்ட சீரான செயற்திட்டங்கள் உரியவாறு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், தற்போதைய நெருக்கடிகள் ஏற்பட்டிருக்காது என்று சிலர் கூறுகின்றனர்.

இருப்பினும் அரசியலமைப்பு உருவாக்கம், தனிச் சிங்களச் சட்டம், அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்களின் பின்னணியில் இதனை ஆராய வேண்டியுள்ளது.

பெரும்பான்மையின ஜனநாயகம் பெரும்பான்மைவாதமாக மாறுவதற்கிடையில் மிகமெல்லிய இடைவெளியே காணப்படுகின்றது.

நாட்டில் அத்தகைய மாற்றம் ஏற்பட்டபோது சிறுபான்மையின மக்களின் தேவைகள் புறக்கணிக்கப்பட்டதுடன், அதன் விளைவாக ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே நாம் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

மூன்று தசாப்த காலப்போருக்கு வித்திட்ட இப்பிரச்சினை தற்போதும் நீடிக்கின்றது என்பதைப் பலர் உணரவில்லை.

அதேபோன்று தற்போது நாம் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றோம். எனவே இதிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுமாறு நாம் ஏற்கனவே அரசாங்கத்தை வலியுறுத்தினோம். இருப்பினும் அரசாங்கம் மிகத்தாமதமாகவே நாணய நிதியத்தை நாடியது.

இவ்வாறானதொரு பின்னணியில் இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டங்கள் மற்றும் மறுசீரமைப்புக்களின்போது வறிய மற்றும் பின்தங்கிய சமூகப் பிரிவினரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை.

அதுமாத்திரமன்றி தேர்தல் பிற்போடப்பட்டமை உள்ளடங்கலாக நாட்டின் அரசியல் விவகாரங்களில் சர்வதேச நாணய நிதியம் தலையீடு செய்யவில்லை. இவையனைத்தும் முக்கியமாகப் பேசப்படவேண்டிய குறைபாடுகளாகவே காணப்படுகின்றன என்றார்.

No comments:

Post a Comment