மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பெரிய காகமே அரசாங்கத்தை பாதுகாக்கிறது - எம்.ஏ.சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 21, 2023

மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பெரிய காகமே அரசாங்கத்தை பாதுகாக்கிறது - எம்.ஏ.சுமந்திரன்

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

கபுடு கா... கா... என்று மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பெரிய காகம்தான் இந்த அரசாங்கத்தை பாதுகாக்கிறது. மக்கள் போராட்டத்தால் சிறிது காலம் விலகி இருந்தவர்களுக்கு எதிர்வரும் நாட்களில் அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது. அடிப்படை கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தாமல் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது. பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியிலும் ஆட்சியாளர்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பல முன்னேற்றகரமான சட்டங்களை இயற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கது. இயற்றப்படும் சட்டங்கள் வெறும் காகிதங்கமாக இருப்பது பிரச்சினைக்குரியது.

சர்வதேச நாணய நிதியம், சர்வதேசம் ஆகியவற்றின் அழுத்தங்களுக்கு அமையவே தற்போது சட்டமூலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சட்டங்களை இயற்றி விட்டோம் என சர்வதேசத்திடம் குறிப்பிட்டு விட்டு அரசாங்கம் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறது. இயற்றப்படும் சட்டங்கள் ஏதும் முறையாக அமுல்படுத்தப்படுவதில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ளது. பொறுப்புக் கூறல் விவகாரத்தில் இலங்கை அசமந்தகரமாக செயற்படுவதாக இலங்கைக்கான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இதுவே உண்மை பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் இலங்கை சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகள் ஏதும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

ஊழல் மோசடி நாடு வங்குரோத்து நிலை அடைவதற்கு பிரதான காரணியாக இருந்தது. மோசடி செய்யப்பட்ட அரச நிதி மீண்டும் அரசுடமையாக்கப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினார்கள். இந்த கோரிக்கை ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் ஊடாக நிறைவேற்றப்படுமா என்பது சந்தேகத்துக்குரியது.

கடந்த ஆண்டு நாட்டு மக்கள் கபுடு கா... கா... என்று கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தினார்கள். மக்களால் வெறுக்கப்பட்ட பெரிய காகம்தான் இந்த அரசாங்கத்தை பாதுகாக்கிறது. போராட்டம் ஊடாக ஜனாதிபதி மாத்திரம்தான் பதவி விலகினார். ஆனால் அவருடன் இணக்கமாக செயற்பட்டவர்கள் அரசாங்கத்தில் உள்ளார்கள்.

மக்களால் வெறுக்கப்பட்டவர்கள் குறுகிய காலம் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகி இருந்தார்கள். ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன. ஆகவே அடிப்படை கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தாமல் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது என்றார்.

No comments:

Post a Comment