இந்திய அரசின் உதவியுடன் 200 ஸ்மாட் வகுப்பறைகள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 21, 2023

இந்திய அரசின் உதவியுடன் 200 ஸ்மாட் வகுப்பறைகள்

காலி மாவட்டத்தில் உள்ள 200 பாடசாலைகளில் நவீன கணனி கூடங்கள் மற்றும் ஸ்மாட் திரைகளை நிறுவும் பணிகளை துரிதப்படுத்துவதற்கான இராஜதந்திர ஆவணங்கள் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்கே ஆகியோரிடையில் கடந்த திங்கட்கிழமை (19) பரிமாறப்பட்டன.

இந்நிகழ்வில் பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரணவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப், இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த இராஜதந்திர ஆவணங்களின் பரிமாற்றமானது, இலங்கை அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட கட்டமைப்பிற்கு இணங்க கொள்முதல் நடவடிக்கைகளை மறுசீரமைப்பதன் மூலம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை நெறிப்படுத்தி துரிதப்படுத்துகிறது.

இந்திய அரசின் நன்கொடை உதவியின் மூலம் அமுல்படுத்தப்படும் இந்த திட்டம், குறைந்த வசதிவாய்ப்புகள் உள்ள பாடசாலைகளில் கற்கும் மாணவர்களிடையே டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையின் கல்வித் துறையில் இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நன்கொடை அடிப்படையிலான திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

இலங்கைக்காக இந்தியாவால் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த அபிவிருத்தி உதவியானது 5 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ள அதே நேரம் 600 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் உள்ள 25 மாவட்டங்களிலும் நன்கொடை அடிப்படையில் கிட்டத்தட்ட 65 அபிவிருத்தி திட்டங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் தற்போது இருபதுக்கும் அதிகமான திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுவருவதுடன் அவை பல்வேறு நிலைகளில் உள்ளன. 

குறிப்பாக இந்திய வீடமைப்பு திட்டம் மற்றும் 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவை ஆகியவை இலங்கையில் இந்தியாவால் முன்னெடுக்கப்படும் நன்கொடை திட்டங்களில் முதன்மையானவை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment