O/L பரீட்சை மே 29 ஆரம்பம் : நாளை நள்ளிரவுடன் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு தடை : அனுமதி அட்டைகள் அனுப்பி வைப்பு : திருத்தங்களை மே 24 வரை Online இல் மேற்கொள்ளலாம் - News View

About Us

About Us

Breaking

Monday, May 22, 2023

O/L பரீட்சை மே 29 ஆரம்பம் : நாளை நள்ளிரவுடன் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு தடை : அனுமதி அட்டைகள் அனுப்பி வைப்பு : திருத்தங்களை மே 24 வரை Online இல் மேற்கொள்ளலாம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு நாளை (23) செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் தடை விதிக்கப்படுவதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வழமை போன்று குறித்த பரீட்சைகள் நிறைவடையும் வரை இத்தடை அமுலில் இருக்குமென திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு அனுமதி அட்டைகள் கடந்த மே 15ஆம் திகதி முதல் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை தங்களது அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாமலிருப்பின் அதனை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.doenets.lk) தரவிறக்கம் செய்து கொள்ளலாமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அது தொடர்பான திருத்தங்கள் காணப்படுமாயின், onlineexams.gov.lk/eic எனும் தளத்தின் ஊடாக எதிர்வரும் மே 24ஆம் திகதி நள்ளிரவு வரை மேற்கொள்ள முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

2022 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் (2023) திட்டமிட்ட வகையில் எதிர்வரும் மே 29 - ஜூன் 08 வரை 3,568 பரீட்சை நிலையங்களில் நாடளாவிய ரீதியில் நடாத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

1968ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க திருத்தப்பட்ட பகிரங்க பரீட்சைகள் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழ் வௌியிடப்பட்டுள்ள கட்டளைக்கமைவாக, 2013 ஜூன் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட 1816 ஆம் இலக்கமுடைய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை தடை விதிக்கப்படுவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு தடைவிதிக்கப்படும் குறித்த காலப்பகுதியில், பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடாத்துதல், ஒழுங்குபடுத்தல்.

பாடங்கள் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடாத்துதல்.

குறித்த பரீட்சைகள் தொடர்பான மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல், விநியோகித்தல்.

குறித்த பரீட்சைகள் தொடர்பான அனுமான வினாக்களை வழங்குவதாகவோ, அது போன்ற மாதிரி வினாக்களை வழங்குவதாகவோ சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், பதாகைகள் போன்றவற்றை நேரடியாக அல்லது இலத்திரனியல் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் ஊடாக வெளியிடுதல், அவ்வாறானவற்றை வைத்திருத்தல் ஆகியன குற்றங்களாகும்.

குறித்த உத்தரவை மீறும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் இச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாவர்.

எவரேனுமொருவர் அல்லது நிறுவனம், குறித்த உத்தரவுகளை ஏதேனுமொரு வகையில் மீறுதல் அல்லது செயற்படும் நிலையில், அது பற்றி அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ, பொலிஸ் தலைமையகத்திற்கோ, பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.எல்.டி. தர்மசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்

பொலிஸ் தலைமையகம்
011 2421111

பொலிஸ் அவசர தொலைபேசி
119

பரீட்சைகள் திணைக்கள உடனடி தொலைபேசி
1911

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம்
011 2785211/ 011 2785212

No comments:

Post a Comment