கப்பல் மூழ்கிய கடற் பரப்பில் இரசாயன பதார்த்தங்கள் கசியவில்லை - மறுக்கும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை - News View

About Us

About Us

Breaking

Monday, May 29, 2023

கப்பல் மூழ்கிய கடற் பரப்பில் இரசாயன பதார்த்தங்கள் கசியவில்லை - மறுக்கும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகி மூழ்கிய எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் சிதைவுகளில் இருந்து இரசாயன பதார்த்தம் கசிவதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும். கப்பல் மூழ்கிய கடற்பரப்பை கடற்படை நாளாந்தம் கண்காணித்து வருகிறது என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் ஜகத் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் விபத்துக்கு உள்ளாகி கடலில் மூழ்கிய எம்.சி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் சிதைவுகளில் இருந்து இரசாயன பதார்த்தம் கசிவதாக ஞாயிற்றுக்கிழமை (28) செய்தி வெளியாகின.

இதனை தொடர்ந்து நேற்றையதினம் கடற்படை மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றின் அதிகாரிகள் கப்பல் மூழ்கிய இடத்துக்கு நேரடியாக சென்று கண்காணித்தபோது அப்பகுதியில் இரசாயன பதார்த்தம் கசிவு, எண்ணெய் படலம் தேங்கியிருத்தல் ஆகியன ஏதும் காணப்படவில்லை. கப்பல் மூழ்கிய வலயத்தை கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

கடற்படையுடன் ஒன்றிணைந்து கப்பல் மூழ்கிய பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதி ஆகியவற்றை சுழியோடிகள் குழுவின் ஒத்துழைப்புடன் 2023.03.15 ஆம் திகதி முதல் 2023.03.24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அப்பகுதியில் நவீன கண்காணிப்பு கெமராக்களை கொண்டு ஆய்வு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கப்பல் மூழ்கிய பகுதியை கடற்படையினர் நாளாந்தம் கண்காணித்து வருகின்றன. அதன் அறிக்கை தொடர்ந்து பெற்றுக் கொள்ளப்படுகிறது, அத்துடன் விபத்துக்குள்ளான இந்த கப்பலை கடலில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனத்திடமிருந்து உரிய அறிக்கைகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

ஆகவே கப்பல் மூழ்கிய கடற் பரப்பில் இரசாயன பதார்த்தம், எண்ணெய் படலம் காணப்படுவதாக வெளியான செய்தி அடிப்படையற்றதாகும்.

No comments:

Post a Comment