மஹிந்தவை பதவி விலகுமாறு அரசாங்கத்துக்குள் இருந்தவர்களே கடுமையான அழுத்தத்தை பிரயோகித்தனர் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ - News View

About Us

About Us

Breaking

Monday, May 1, 2023

மஹிந்தவை பதவி விலகுமாறு அரசாங்கத்துக்குள் இருந்தவர்களே கடுமையான அழுத்தத்தை பிரயோகித்தனர் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்துக்குள் எடுத்த சூழ்ச்சிகள் முழு நாட்டுக்குள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தியது. ஜனநாயக ரீதியில் மீண்டும் நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவோம். பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பொரள்ளை கெம்பல் மைதானத்தில் திங்கட்கிழமை (01)இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 2022 ஆம் ஆண்டு மே 09 சம்பவம் தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச புத்தகம் வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தை வீழ்த்த சர்வதேச மட்டத்தில் சூழ்ச்சிகள் காலி முகத்திடல் போராட்டக் களத்தில் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடுகிறார். தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சூழ்ச்சிகளை அவர் மறந்து விட்டார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாத காலப்பகுதியில் எரிபொருள், எரிவாயு, மின் விநியோக கட்டமைப்பில் திட்டமிட்ட வகையில் நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டன.

பொதுஜன பெரமுனவின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு அரசாங்கத்துக்குள் இருந்தவர்கள்தான் கடுமையான அழுத்தம் பிரயோகித்தார்கள்.

2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவால் ஜனாதிபதியாக முடியுமாக இருந்தால் தமக்கும் ஜனாதிபதியாக முடியும் என்ற எண்ணத்தில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி ஹெலிகொப்டரில் ஏறினார்கள். இன்று அந்த ஹெலிகொப்டர் வானத்தில் பறக்க முடியாத அளவுக்கு உள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்துக்குள் எடுத்த சூழ்ச்சிகள் முழு நாட்டுக்குள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தியது.

ஜனநாயக ரீதியில் மீண்டும் நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவோம். பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என்றார்.

No comments:

Post a Comment